Published : 20 Jul 2015 08:01 AM
Last Updated : 20 Jul 2015 08:01 AM

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை: ஒரு முறையாவது வாய்ப்பளிக்க முதல்வருக்கு வேண்டுகோள்

மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 45-ஆக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறைந்தபட்சம் இந்த ஒரு ஆண்டு மட்டுமாவது வாய்ப்பளிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதுதொடர்பாக, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வெழுதுவோர் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தேன்மொழி, ஹேமநாதன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வெழுதுவதற்கான வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வைப் போன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. கடந்த 2001 முதல் 2013 வரையில் 5 முறை மட்டுமே குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குரூப்-1 தேர்வு பற்றி மிக தாமதமாகவே விழிப்புணர்வு பெறுகின்றனர். அதன்பிறகே அவர்கள் தேர்வுக்கு முழுமையாகத் தயாராகிறார்கள். ஒரு தேர்வு நடத்தி பணிநியமனம் முடிய 3 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இதனால், வயது வரம்பு விரைவாக கடந்துவிடுகிறது.

இதனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதி பேர் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அரசிடம் வேலை கேட்கவில்லை. வேலைக்கான தேர்வெழுதும் வாய்ப்பைத்தான் கேட்கிறோம். இதனால், அரசுக்கு எந்தவிதமான பொருளாதார இழப்பும் ஏற்படப்போவதில்லை.

குஜராத், ஹரியானா, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு 45 ஆக இருக்கிறது. கல்வியில் முன்னணியில் திகழும் கேரளாவில் 50 வயது வரை குரூப்-1 தேர்வெழுதலாம். தமிழ்நாட்டில் 1991 வரை குரூப்-1 தேர்வுக்கு வயது வரம்பு கிடையாது.

வயது வரம்பை உயர்த்தக்கோரி முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துவிட்டோம். எனினும் எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போன்று குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவினர் உட்பட அனைவருக்கும் 45 ஆக உயர்த்தி, குறைந்தபட்சம் இந்த ஒரு முறையாவது வாய்ப்பளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x