Published : 05 Jul 2015 01:23 PM
Last Updated : 05 Jul 2015 01:23 PM

குளத்தூர் வங்கி நகை திருட்டு வழக்கில் 5 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி ரொக்கம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் 19 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், இதுவரை 5 கிலோ தங்கம், ரூ.1.5 கோடி ரொக்கம் கைப்பற்றப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குளத்தூர் சிட்டி யூனியன் வங்கியில் கடந்த ஆண்டு நவ.30-ம் தேதி இரவு 19 கிலோ நகைகள் திருடப்பட்ட வழக்கில், ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மு.கோபாலகிருஷ்ணன்(30), அவரது சகோதரர் அழகர்சாமி(28), நகை விற்பனையாளரான புதுக் கோட்டை திருக்கோகர்ணத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார்(40) ஆகியோரை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில், கோபாலகிருஷ்ணனை 4 நாட்களும், ஆனந்தகுமாரை 2 நாட்களும் போலீஸ் காவலில் எடுத்து, கீரனூர் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இருவரும் தெரிவித்த தகவ லின்படி, திருடப்பட்ட நகைகளை அடகு வைத்த இடங்கள், உருக்கி விற்பனை செய்த இடங்களுக்குச் சென்று நகைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதன்படி, சுமார் 5 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோபால கிருஷ்ணன், ஆனந்தகுமாரின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இருவரும் மீண்டும் நேற்று கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேவைப்பட்டால், கோபால கிருஷ்ணன் உள்ளிட் டோரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x