Published : 23 Jul 2015 09:56 AM
Last Updated : 23 Jul 2015 09:56 AM

பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்ப ஆண்டுக்கு ரூ.60 கோடி செலவாகும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய ஆண்டுக்கு ரூ.60 கோடி செலவாகும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மக்களவை, மாநிலங்களவை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளி பரப்புவது போல தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சி களையும் ஒளிபரப்ப உத்தரவிட கோரி, லோக் சத்தா கட்சித் தலைவர் டி.ஜெகதீஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப் பேரவைச் செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் சார்பில் கூடுதல் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டிருந்த தாவது: சட்டப்பேரவை நிகழ்ச்சி களை அதிநவீன தொழில் நுட்பத்தில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஆண்டுக்கு ரூ.60 கோடி செல வாகும். தொடர் செலவினமாக மாதம் ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் செலவாகும். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் ஆண்டுக்கு 50 முதல் 60 நாட்கள் வரை மட்டுமே நடக்கின்றன. அதனால் இவ்வளவு பணத்தையும், மனிதவளத்தையும் செலவிட்டு நேரடி ஒளிபரப்பு செய்யத் தேவையில்லை.

தற்போது இந்தியாவில் 80 சதவீத மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. பல மாநிலங்கள், குறிப்பிட்ட சில பேரவை நிகழ்ச்சிகளை மட்டும் தனியார் ஏஜென்ஸிகள் மூலம் ஒளிபரப்புகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் போன்ற நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. கேள்வி நேரம் உள்ளிட்ட இதர பேரவை நிகழ்வுகளின் தணிக்கை செய்யப்பட்ட பதிவுகள் சுமார் 34 ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன.

வேறு பல மாநிலங்களில் இதுபோன்ற வீடியோ பதிவுகூட தரப்படுவதில்லை. பத்திரிகையாளர்கள் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக கண்டு செய்தி சேகரித்து பிரசுரிக்கின்றனர். பேரவை நிகழ்ச்சிகள் குறித்த தகவல் களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க இப்போதுள்ள முறையே போதுமானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மனு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘இந்த வழக்கில் தம்மையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பேரவை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தேவையான செலவை தாங்களே ஏற்பதாகவும், கேப்டன் டிவியில் இலவசமாக ஒளிபரப்ப தயாராக இருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த வழக்கில் தேமுதிக தலைவர் உதவிடத் தேவையில்லை. கூடுதல் ஆதாயம் தேடுவதற்காகவே மனு தாக்கல் செய்திருப்பதால் அதனைத் தள்ளுபடி செய்கிறோம். அட்வகேட் ஜெனரல் வாதிடும்போது, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் பேரவைத் தலைவர் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அதனால் அதுதொடர்பான முடிவை அவரிடமே விட்டுவிட வேண்டும் என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், பேரவை நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஒளிபரப்புவது பேரவைத் தலைவர் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கூறி, தீர்ப்புகள் சிலவற்றையும் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x