Published : 04 Jul 2015 03:05 PM
Last Updated : 04 Jul 2015 03:05 PM

முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளால் நனவாகாத இல்லக் கனவு: திருச்சி மாநகராட்சியில் மக்கள் அவதி

திருச்சி மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 5 வார்டுகளில் மனைப் பிரிவுகள் முறைப்படுத்தப்படாததால் ஏறத்தாழ 25 ஆயிரம் மனைகளில் வீடுகள் கட்ட முடியால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சியில் ஏற்கெனவே 60 வார்டுகள் இருந்தன. இந்தநிலையில் மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டில் மாநகரை ஒட்டிய பகுதிகளான திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாக்குறிச்சி, எல்லக்குடி, கீழக்கல்கண்டார்கோட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. இதற்கான அரசாணையை 2010 செப்டம்பர் 28-ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டது. இதன்பிறகு மாநகராட்சியின் வார்டு எண்ணிக்கை 65-ஆக உயர்ந்தது.

மாநகராட்சியை ஒட்டியுள்ள இந்த பகுதிகளில் ஏற்கெனவே உள்ளாட்சி நிர்வாகங்ளின் அனுமதியோடு ஏராளமான மனைப்பிரிவுகள் போடப்பட்டு, பல இடங்களில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் அனுமதிபெற்று வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இந்த பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பிறகு, வீடுகள் கட்டுவதற்கு மாநகராட்சியில் கட்டிட அனுமதி பெற வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் உள்ள மனைப்பிரிவுகள் மாநகராட்சியால் முறைப்படுத்தப்படாததால் இந்த பகுதியில் உள்ள மனைப் பிரிவுகளில் புதிதாக வீடுகள் கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்காமல் அந்த மனுக்களை தள்ளுபடி செய்து வருகின்றன.

மாநகராட்சியின் கட்டிட அனுமதி இருந்தால் மட்டுமே வங்கிகளில் வீட்டுக் கடன் பெற முடியும் என்பதால், மனைகளை வாங்கிய பலரும் வீடுகளை கட்ட முடியாமல் கடந்த 5 ஆண்டுகளாக பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி கூட்டங்களில் அந்த வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அவ்வப்போது குரல் எழுப்பி வருகின்றனர். ஆயினும் இதற்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.

அரசாணை வெளியிட வேண்டும்

இதுகுறித்து கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள கணேஷ் கூறியபோது, “தற்போதைய காலகட்டத்தில் மனைப்பிரிவுகளை வாங்கிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மாத ஊதியம் பெறுவோருக்கு வங்கிகள் வீடுகள் கட்ட தாராளமாக கடன்களை வழங்கி வருகின்றன.

மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் உள்ள மனைப்பிரிவுகளில் வீடுகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க மறுப்பதால், பலரது வீடு கட்டும் கனவு நனவாகாமலேயே உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மனைப்பிரிவுகளை முறைப்படுத்த தனியாக அரசாணையை வெளியிட வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் உள்ள மனைப்பிரிவுகளை முறைப்படுத்த அரசாணை வெளியிட வேண்டும் என மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உரிய பரிந்துரைகளும் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு இது தொடர்பாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை” என்றனர்.

ரூ.1.50 லட்சம் பேரம்

மாநகராட்சியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட வார்டுகளில் உள்ள மனைப்பிரிவுகளை முறைப்படுத்தாததால் கட்டிட அனுமதிக்கான கட்டணம், வீடுகளுக்கான வரி, குடிநீர் வரி என பல்வேறு வருவாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதைப் பயன்படுத்தி இந்த பகுதிகளில் வீடுகள் கட்ட முயற்சிப்போரிடம் சிலர் மாநகராட்சியில் நாங்கள் அனுமதி பெற்றுத் தருகிறோம் எனக் கூறி பெருந்தொகையைப் (ரூ.1.50 லட்சம் வரை) பேரம் பேசி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட்டு, மனைப்பிரிவுகளை முறைப்படுத்தி மக்களின் இல்லக் கனவுகளை நனவாக்க வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x