Published : 11 Jul 2015 08:34 AM
Last Updated : 11 Jul 2015 08:34 AM
கம்பன் அகாடமிக்கு பாஜக எம்.பி. தருண் விஜய் வழங்கிய ரூ.5 லட்சம் நிர்வாகச் சிக்கல் காரணமாக செலவிட முடியாத நிலையில் இருப்பதால் காசோலை மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் காரைக்குடியில் நடந்த கம்பன் விழாவில் தருண் விஜய்க்கு ‘அருந்தமிழ் ஆர்வலர்’ விருதை வழங்கி கவுரவித்தது காரைக்குடி கம்பன் கழகம். விருது பெற்றுப் பேசிய தருண் விஜய், ‘‘கம்பன் பெயரில் இங்கே ஒரு நூலகம் தொடங்க வேண்டும் அதற்காக கம்பன் அகாடமிக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதி யிலிருந்து ரூ.5 லட்சத்தை வழங்கு கிறேன். மேலும், காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவிய சா.கணேசனுக்கு அஞ்சல்தலை வெளியிடவும் நாட்டரசன்கோட்டை யில் கம்பர் சமாதி அமைந்துள்ள இடத்தை சுற்றுலா தலமாக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பேன்’’ என்று கூறினார்.
அதன்படியே, கம்பன் அகாட மிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஜூன் முதல் வாரத்தில் அனுப்பிவைத்தார். ஆனால், காரைக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பதாக தருண் விஜய் தவறுதலாக குறிப்பெழுதி அனுப்பியதால் டேராடூன் ஆட்சியர் ராமநாதபுரம் ஆட்சியருக்கு காசோலையை அனுப்பி இருக் கிறார். ஆனால், தங்களுடைய மாவட்ட எல்லைக்கு உட்பட்டே தொகையை செலவழிக்க முடியும் என்பதால் இந்தத் தொகையை காரைக்குடி கம்பன் கழகத்துக்கு வழங்க முடியாது என்று கைவிரித்துவிட்டது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம். இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக காசோலை அங்கேயே முடங்கியுள்ளது.
இது தொடர்பாக ‘தி இந்து’ விடம் பேசிய காரைக்குடி கம்பன் கழக செயலாளர் பழ.பழனியப் பன், ‘‘இதுவரை பதிவு செய்யப் படாமல் இருந்த காரைக்குடி கம்பன் கழகத்தை நாங்கள் முறைப் படி பதிவு செய்து புதிய நிர்வாகி களையும் தேர்வு செய்துள்ளோம். யாரும் கோரிக்கை வைக்கா மலேயே கம்பனுக்கு மூன்று சிறப் புகளைச் செய்வதாக தாமாகவே அறிவித்தார் தருண் விஜய். அவர் சொன்னது போலவே கம்பன் அகாடமியில் நூலகம் அமைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவிட கழகத்தின் புதிய நிர்வாகி கள் ஆர்வமாய் உள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியர் இந்த நிதியை சிவகங்கை ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம் என்று முதலில் கூறினார். ஆனால், அதில் நிர்வாகச் சிக்கல் இருப்பதாக திட்ட அலுவலர் கூறியதால் காசோலை எங்களுக்கு வந்து சேரவில்லை’’ என்றார்.
இதுகுறித்து ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமாரிடம் கேட்ட போது, ‘‘காசோலையை சிவகங் கைக்கு அனுப்ப முடியும். ஆனால், நிதி செலவு செய்யப்படும் விதத்தை கண்காணிப்பதில் எங்களுக்கு சிரமங்கள் இருப்பதால் அப்படிச் செய்யமுடியவில்லை. இதுகுறித்து திட்ட அலுவலரிடம் பேசுங்கள்’’ என்றார்.
திட்ட அலுவலர் பழனியோ, ‘‘எங்களுக்கு வந்த நிதியை அடுத்த மாவட்டத்தில் நடக்கும் வேலைக்கு வழங்கிட எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே காசோலையை இன்று அல்லது நாளைக்குள் டேராடூன் ஆட்சியருக்கே அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பான விளக்கக் கடிதத்தை தருண் விஜய்க்கும் அனுப்ப உள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT