Published : 25 Jul 2015 08:56 AM
Last Updated : 25 Jul 2015 08:56 AM

சிவகங்கை அருகே தொல்பொருள் துறை அகழ்வாராய்ச்சியில் சங்ககால மக்களின் அணிகலன்கள் கண்டெடுப்பு: மதுரையின் தொன்மையை நிரூபிக்கும் ஆதாரங்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடிபள்ளிச்சந்தைபுதூரில் மத்திய தொல்பொருள் துறை யினர் மேற்கொண்டுள்ள அகழ் வாராய்ச்சியில், சங்ககால மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், இரும்பு ஆயுதங்கள், விளையாட்டுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன. இங்கு கிடைத்துள்ள சான்றுகளை வைத்தே மதுரை எவ்வளவு தொன்மையானது என்பதை நிரூபிக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழ்வாய்வு பிரிவு சார்பில் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில், கடந்த மார்ச் மாதம் முதல் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

இதில், அந்த இடத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை நகர மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏராளமாக கிடைத்து வருகின்றன. கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன.

சங்ககால மக்கள் வாழ்ந்த வீடுகள், பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், தானியங்கள் சேமித்து வைக்கும் மண்பானைகள், கழுத்து, காதுகளில் அணியும் அணிகலன்கள், சுடுமண் மணிகள், பளிங்கு மணிகள் மற்றும் காதணிகள் உள்ளிட்ட ஏராளமான அரிதான பொருட்களும் கிடைத்துள்ளன.

மனிதமுக அமைப்புடைய பொம்மை, நந்தி உருவ பொம்மைகள், உருவமற்ற சுதைகளும் கிடைத்துள்ளன. தற்காப்புக்காகவும், வேட்டையாடவும் பயன்படுத்தப்பட்ட இரும்பாலான பல்வகை ஈட்டி முனைகள், மகளிர் விளையாட பயன்படுத்திய தந்தத்தால் ஆன தாயக்கட்டைகளும் கிடைத்துள்ளன.

இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும், உதவி தொல்லியலாளர்கள் எம்.ராஜேஷ், என்.வீரராகவன் ஆகியோர் கூறியது:

பழங்காலச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள் இருக்கும் இடத்தையும், ஒரு ஊர் இருந்து அழிந்து போனதையும் தொல்லியல் மேடு என அழைப்போம். அக்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், விட்டுப்போன சான்றுகள் இருக்கக்கூடிய இடத்தை விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு செய்வதே தொல்லியல் அகழ்வாய்வு.

முறையாக தொல்லியல் மேட்டை ஆராய்ந்து அளந்து, அளந்தபின் பலவகை கட்டங்களாகப் பிரிக்கிறோம். 10-க்கு 10 மீட்டர் சதுர பரப்பளவில் 4-க்கு 4 மீட்டர் அளவில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.

பொதுவாக மேலிருந்து கீழ்நோக்கி அகழாய்வு செய்கிறோம். ஆனால், தொல்லியல் விதிமுறைகளின்படி கீழிலிருந்து மேல்நோக்கி வருவதுதான் அகழாய்வு.

கீழிலிருந்து மேல்நோக்கி வருவதை தொல்லியல் மண் அடுக்கு என்கிறோம். மண் அடுக்கைப் பொருத்து அன்றைய காலகட்டத்தை வரையறை செய்ய முடியும்.

தினமும் 10 மீட்டர் ஆழத்துக்கு அகழ்வாய்வை பொறுமையாகவும், மிகவும் கவனமாகவும் மேற்கொள் கிறோம். அதில் கிடைக்கும் மண்ணை சலித்து, பிரித்து கிடைக்கும் சிறிய பாசிகள், கல் மணிகள், கண்ணாடி மணிகளை பாதுகாப்பாகச் சேகரிப் போம்.

முதல்நிலையில் உடைந்துபோன மண்பாண்டங்கள், தொல்பொருட்கள், மணிகள், இரும்புப் பொருட்கள் கிடைத்தன.

அங்கு எந்தவிதமான மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள், தடயங்கள், தொல்பொருட்கள் இல்லாத மண் அடுக்குப் பகுதியை கன்னிமண் என்போம். அகழ்வாய்வுக்காக கன்னிமண் வரை தோண்டுவோம்.

பள்ளிச்சந்தை புதூரில் மேட்டின் தன்மையைப் பொருத்து குறைந்தபட்சம் 2.6 மீட்டர் ஆழத்துக்கும், அதிகபட்சமாக 4.4 மீட்டர் ஆழத்துக்கும் கன்னி மண் வரை தோண்டி உள்ளோம்.

இதில், சங்க காலத்துக்குப் பிறகு, அடுத்த வரலாற்று தொடக்க காலத்துக்கான சான்றாதாரமாக மண் அடுக்குகள் உள்ளன. இங்கு கிடைத்துள்ள சான்றுகளை வைத்தே, மதுரையின் பழமையை நிரூபிக்கலாம். சங்ககால பானை ஓட்டில் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், சங்ககால மக்கள் பயன்படுத்திய அணிகலன்களான சுடுமணிகள், பளிங்கால் ஆன கழுத்து மணிகள் மற்றும் காது மணிகளும் கிடைத்துள்ளன.

தற்காப்புக்காகவும், வேட்டையாட வும் பயன்படுத்தப்பட்ட ஒரு அடி முதல் 10 செ.மீ. வரையிலான ஈட்டி முனைகள் கிடைத்துள்ளன. சங்க கால மகளிர், தந்தத்தால் ஆன தாயக்கட்டைகளை விளையாடிய சான்றுகளும் கிடைத்துள்ளன என்றார்.

இவர்களுக்கு உறுதுணையாக சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை ஆய்வு மாணவர்களும், கிருஷ்ண கிரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர்களும் அகழ் வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x