Published : 08 Jul 2015 08:38 AM
Last Updated : 08 Jul 2015 08:38 AM

860 சதுரஅடி வரையிலான மனைகளில் கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி சென்னை மாநகராட்சியே வழங்கும்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 860 சதுர அடி வரை பரப்பளவு உள்ள மனைகளில் கட்டிடம் கட்ட இனி திட்ட அனு மதியை மாநகராட்சியே வழங்கும். இதற்கான அதிகாரத்தை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சிஎம்டிஏ வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குறைந்தபட்ச மனை பரப்பளவான 80 சதுர மீட்டருக்கு (860 சதுர அடி) கீழே உள்ள மனைகளுக்கு மாநகராட்சி யால் திட்ட அனுமதி வழங்க முடியாத நிலை இருந்தது.

இதனால் சாதாரண கட்டிடங்கள் கட்ட ஒப்புதல் பெற இயலாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அரசு உத்தரவின் படி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற் கான அதிகாரப்பகிர்வு தற்போது சென்னை மாநகராட்சி ஆணைய ருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குடும்ப பாகப் பிரிவினை, நீதிமன்ற உத்தரவு போன்றவற்றால் உட்பிரிவு செய்யப்பட்ட மனை களுக்கு, குறைந்தபட்ச மனை பரப் பளவில் 10 சதவீதத்துக்கு உள்ளாக விதிமீறல் இருந்தால் ஒப்புதல் வழங்க இதன்மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து, மாநகராட்சி ஆணையர் ஒப்புதல் வழங்கப் பரிந்துரைப்பதற்கு துணை ஆணையர் (பணிகள்) தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் 80 சதுர மீட்டர் (860 சதுர அடி) பரப்பளவு வரையிலான மனைகளுக்கு பொது மக்கள் திட்ட அனுமதி பெற விண்ணப்பித்தால், அதை பரிசீலனை செய்து, ஒப்புதல் வழங்க மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து மண்டல அலுவலகங்கள் முன்பும் விளம்பர பதாகைகள் வைக்கப்படும்.

இவ்வாறு மேயர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x