Published : 02 Jul 2015 04:10 PM
Last Updated : 02 Jul 2015 04:10 PM

பயணி கன்னத்தில் அறையவில்லை: ஜெ.-க்கு ஸ்டாலின் பதில்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணியின் கன்னத்தில் தான் அறையவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் பயணித்தார். அந்த பயணித்தின்போது அவர் பயணி ஒருவரின் கன்னத்தில் அறைந்து ஆவேசமாக பேசுவதுபோல் காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் வெளியானது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஜெயலலிதா இன்று தனது அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "நான் மெட்ரோ ரயிலில் பயணித்தபோது இருக்கையில் அமர்ந்திருந்த பொதுப்பணித் துறையைச் சேர்ந்த ஒரு பெண் ஊழியரியின் காலை ஒரு நபர் மிதித்துக் கொண்டிருந்தார். அந்த நபரை வேறு பக்கமாக செல்லுமாறு கூறினேன். அப்போது என் கை விரல் அவர் கன்னத்தில் பட்டது உண்மைதான். ஆனால், நான் அவரை அறையவில்லை. ஒருவரை கன்னத்தில் அறைவது என்றால் எந்தப்புறமாக கைகளை வைத்து அறைவார்கள் என்பதுகூட ஜெயலலிதாவுக்கு புரியவில்லை. என்னிடத்தில் அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் சேவையை ஜெயலலிதா நேரடியாக வந்து திறந்து வைக்கவில்லை. மாறாக கானொளி காட்சி மூலமே திறந்துவைத்திருக்கிறார். இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தன் மீதான அதிருப்தியை மூடி மறைக்கவே என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சினையை திசை திருப்ப முயன்றுள்ளார் ஜெயலலிதா. இது வருந்தத்தக்கது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x