Last Updated : 30 Jul, 2015 04:38 PM

 

Published : 30 Jul 2015 04:38 PM
Last Updated : 30 Jul 2015 04:38 PM

கலாமை கவர்ந்த விவசாய கல்வி: கிருஷ்ணகிரி நண்பர் உருக்கம்

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான சனத்குமார், அப்துல்கலாமின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

இவர் காவேரிப்பட்டணம் அருகே சவுளூர் கிராமத்தில் கேம்பிரிட்ஜ் பள்ளி நடத்தி வருகிறார். சனத்குமார், மாணவர்களிடையே மனப்பாட கல்விமுறை ஒழிக்க வேண்டும் என்கிற கொள்கையுடன் மாணவர்களுக்கு வாழ்க்கை சார்ந்த கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறார். இவரை பற்றி பெங்களூரில் உள்ள தனது அறிவியல் ஆலோசகரான நாரயணமூர்த்தி மூலம் அறிந்த அப்துல்கலாம், சனத்குமாரை சந்திக்க விரும்பினார்.

கடந்த 2004-ம் ஆண்டு டெல்லியில் குடியரசுத்தலைவர் கலாமின் அழைப்பை ஏற்று, சனத்குமார் அவரை நேரில் சந்தித்தார். அப்போது சனத்குமார் காலில் 3 கிலோ எடை கொண்ட செயற்கை கால் பொருத்தி இருப்பதை அறிந்து, தனது உதவியாளர்கள் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பரிந்துரைத்து, ராக்கெட்டிற்கு பயன்படுத்தப்படும் இலக்குவான தகட்டினை பெற்றுத் தந்தார். தற்போது அவர் கொடுத்த 300 கிராம் தகட்டின் மூலம் செயற்கை கால் பொருத்தி நடந்து வருவதாக பெருமையுடன் நினைவு கூறுகிறார் சனத்குமார்.

10 ஆண்டுகளாக தனது செயல்பாடுகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் கேட்டு வந்த கலாம் குறித்து சனத்குமார் கூறியது:

கிராமப்புற மாணவர்கள் கல்வியுடன் இயற்கை விவசாயத்தை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் என சவுளுர் கிராமத்தில் உள்ள பள்ளியில் 10 ஆயிரம் சதுர அடியில் இயற்கை விவசாய தோட்டம் அமைந்துள்ளோம்.

இதை அறிந்து, அதனை பார்வையிட கடந்த 2013-ம் ஆண்டு காவேரிப்பட்டணத்திற்கு கலாம் வருகை புரிந்தார். அப்போது, அவர் மாணவர்கள் கல்வியுடன் விவசாயம் குறித்து பயிற்சி பெற்றால், விவசாயத்தை காக்க முடியும் எனவும், இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விவசாய கல்வி குறித்த பயிற்சி அளிக்க, அதற்கான திட்டமிட வேண்டும்.

சிறு வயது குழந்தைகளை விடுதியில் தங்கி படிக்க வைப்பதால், எதிர்காலத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடுவதாக கவலையுடன் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் இயற்கை விவசாயம் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் குறித்தும், தேசிய அளவில் அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் கொண்டு வர வேண்டும் என தனது நெருங்கிய நண்பரிடம் கலாம் பேசியுள்ளார்.

சுயநலம், தன்னலமற்ற ஒரு நல்ல மனிதரை, ஒரு வழிக்காட்டியை இழந்துவிட்டதாகவும், யாராலும் அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது என வேதனையுடன் சனத்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x