Published : 22 Jul 2015 08:18 AM
Last Updated : 22 Jul 2015 08:18 AM
திருப்பதி அருகே 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 3 சாட்சிகளையும் தனிமைப்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தும் செயலில் ஆந்திர சிறப்பு புலனாய்வுக் குழு ஈடுபட்டது என்று மக்கள் கண் காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
திருப்பதி அருகே சேஷாசலம் வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்த 3 சாட்சிகளை அழைத்துக் கொண்டு, ஆந்திர சிறப்பு புலனாய் வுக் குழு நேற்று முன்தினம் கள விசாரணை செய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆர்ச்சனாபுரம் காந்தி நகரில் வசிக்கும் சேகர், ஜவ்வாதுமலை கீழ்கனவாவூர் கிராமத்தில் வசிக் கும் இளங்கோவன், தருமபுரி மாவட்டம் சித்தேரி கிராமத்தில் வசிக்கும் பாலசந்தர் ஆகியோரை தனிமைப்படுத்தி அடைத்து வைத்து அச்சத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக அவர்கள் 3 பேரையும் பாதுகாத்து வரும் மக்கள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் கூறும்போது, “3 சாட்சிகளின் வீட்டில் தொடங்கி இறுதியாக சென்ற இடம் வரை விசாரணை நடத்துவதாகத்தான் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அனுமதி வாங்கியது. ஆனால், பாலச்சந்தர் ஒருவரைதான், அவர் சென்ற இறுதி இடமான புத்தூர் வரை அழைத்துச் சென்றனர். சேகர் மற்றும் இளங்கோவனை திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு நள்ளிரவு கொண்டு சென்றனர். அங்குள்ள பல்கலைக்கழக விடுதியில் தனிமையில் அடைத்து வைத்து அச்சத்தை ஏற்படுத்தினர். அவர்கள் 2 பேரிடம் பேசுவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. எங்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டினர்.
சுட்டுக் கொல்லப்பட்ட மகேந்திரனுடன் பேருந்தில் சென்ற சேகரை, புத்தூரில் இறங்கிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரிக்கவில்லை. அந்த இடத்தில் இருந்துதான் மகேந்திரனை தனியாகப் பிரித்து இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். புத்தூர் வரை மகேந்திரனை நேரில் பார்த்த சாட்சி சேகர். மேலும், திருப்பதி வனப் பகுதியில் உள்ள டிஐஜி காந்தாராவ் அலுவலக வளாகத்தில் இருந்து தப்பித்து வந்த இளங்கோவனையும், அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. அவரை அழைத்துச் சென்றால் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால் அழைத்துச் செல்லவில்லை. சாட்சிகள் 3 பேரையும் பொய் வழக்கில் கைது செய்ய ஆந்திர அரசு மற்றும் போலீஸ் திட்டமிட்டுள்ளது. அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
3 சாட்சிகள் பயணித்த வழித் தடங்கள் மற்றும் இடங்களில் நேரடி விசாரணை என்று கூறிவிட்டு 2 சாட்சிகளை தனிமையில் அடைத்து வைத்தது, நீதிக்கு முரணானது. இதுகுறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதால், இன்று (நேற்று) காலை 11 மணியளவில் சேகர் மற்றும் இளங்கோவனை எங்களிடம் ஒப்படைத்தனர். 3 சாட்சிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அவர்களை பாதுகாக்க தமிழக அரசு முன் வர வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT