Published : 13 Jul 2015 06:04 PM
Last Updated : 13 Jul 2015 06:04 PM

தமிழக முதல்வரின் உடல்நிலையை விமர்சிப்பது நாகரிக அரசியல் இல்லை: தமிழருவி மணியன்

தமிழக முதல்வரின் உடல்நிலையை மையமாக வைத்து எழும் விமர்சனங்கள் எந்த வகையிலும் விரும்பத்தக்கவையன்று. அதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்த நினைக்கும் போக்கு நாகரிக அரசியலின் நல் அடையாளம் இல்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அரசின் நிர்வாக நடைமுறைகளைக் கூர்மையாக் கண்காணிப்பதும், அவற்றுள் அரங்கேறும் தவறுகளையும், முறைகேடுகளையும் சமூகப் பொறுப்புணர்வுடன் மக்கள் பார்வைக்குக் கொண்டு வருவதும் அரசியல் கட்சிக்களுக்குரிய மிக முக்கியமான கடமைகளாகும். ஆனால், எதிர்மறை அரசியலில் ஈடுவதையே வழக்கமாகக் கொண்டு பெரும்பாலான கட்சிகள் இன்று இயங்கி வரும் போக்கு வருந்தத்தக்கது.

மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் என்ற போர்வையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களும், தனி நபர் தாக்குதல்களும் நாளுக்கு நாள் பொதுவாழ்வில் பல்கிப் பெருகி வருவது ஜனநாயக மரபுகளுக்கு வலிமை சேர்க்கப் போவதில்லை.

அதிமுக ஆட்சியில் அன்றாடம் அரங்கேறி வரும் ஊழல் முறைகேடுகளை, டாஸ்மாக் போன்ற மக்கள் நலனுக்கு எதிரான செயற்பாடுகளை, ஜாதி சார்ந்த ஆணவக் கொலைகளை, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை எதிர்த்து அரசியல் நடத்துவது தான் எதிர்க்கட்சிகளுக்கு உரிய இலக்கணமே தவிர, முதல்வரின் உடல் நிலை குறித்து நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று போலித்தனமான பாசத்துடன் தனி நபர் உரிமையில் தலையிடுவது தேவையற்ற செயலாகும்.

ஆளும் கட்சியின் தலைவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகச் சொல்லி அதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்த நினைக்கும் போக்கு நாகரிக அரசியலின் நல் அடையாளம் இல்லை. ஒருவரது உடல்நிலை அவருக்கான அந்தரங்க விவகாரம். அதில் தேவையின்றி மூக்கை நீட்டுவது மக்கள் நலன் செயல் என்று ஆரோக்கியமான சிந்தனை உள்ள யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

ஆளும் கட்சியின் ஆயிரம் தவறுகளை எதிர்த்து நாம் அரசியல் செய்வோம். முதல்வரின் உடல்நலனை பொதுப் பிரச்சினையாக்குவதற்கு இனியாவது முற்றுப்புள்ளி வைப்போம்'' என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x