Published : 25 Jul 2015 02:56 PM
Last Updated : 25 Jul 2015 02:56 PM

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் கழிப்பிடம் கட்டும் பணி 3 மாதமாக இழுத்தடிப்பு

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பிடம் கட்டுமான பணிகள் 3 மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடப்பதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து வாசகர் ஒருவர் ‘தி இந்து’ நாளிதழ் `உங்கள் குரல்’ பகுதியில் கவலை தெரிவித்தார். அதன்படியே இலவச கழிப்பறை கட்டும் பணி முடங்கிக் கிடப்பது தெரியவந்தது.

முக்கியத்துவம் மிகுந்தது

தூத்துக்குடி மாநகராட்சியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் என, இரு பிரதான பஸ் நிலையங்கள் உள்ளன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பஸ் நிலையமே முக்கியத் துவம் மிகுந்ததாக உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், திருவைகுண்டம், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் புறநகர் பஸ்கள் மற்றும் அனைத்து நகர்ப்புற பஸ்கள், மினி பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் இருந்து தான் இயக்கப்படுகின்றன.

இதனால் பழைய பஸ் நிலையம் 24 மணி நேரமும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும். தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.



பயணிகள் சிரமம்

ஏற்கெனவே இருந்த இலவச சிறுநீர் கழிப்பிடம் சேதமடைந்ததால் அதனை இடித்துவிட்டு புதிய கழிப்பிடம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால், 25 சதவீத பணிகள் கூட முடிவடையாத நிலையில் கடந்த 3 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.

இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த இலவச கழிப்பிடத்தை ஒட்டி தனியார் மூலம் ஒப்பந்தம் எடுத்து நடத்தப்படும் கட்டண கழிப்பிடம் செயல்படுகிறது. இலவச கழிப்பிடம் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதால் பயணிகள் அவசரத்துக்கு கட்டண கழிப்பிடத்தையே பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பல்வேறு இடையூறுகள்

கட்டண கழிப்பிடத்துக்கு உதவுவதற்காகவே இலவச கழிப்பிட பணிகளை தாமதப் படுத்துவதாகவும் பயணிகள் சந்தேகம் எழுப்புகின்றனர். மேலும், கட்டுமான பொருட் களான மணல், ஜல்லி போன்றவை பஸ் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இலவச கழிப்பிட கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் (பொ) ராக்கப்பனிடம் கேட்டபோது, ‘

இலவச கழிப்பிட கட்டுமான பணிகள் தாமதமாவது குறித்து எனது கவனத்துக்கு இதுவரை வரவில்லை. நேரில் ஆய்வு செய்து கட்டுமான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என, உறுதியளித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x