Published : 23 Jul 2015 03:37 PM
Last Updated : 23 Jul 2015 03:37 PM
தமிழகத்தில் மற்ற மாநகரங்களில் இருப்பதைப் போன்றே திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிலும் கட்டிடங்களைக் கட்டுவதில் விதிமீறல், போதிய பார்க்கிங் வசதி இல்லாமல் வணிக வளாகங்களை கட்டுதல் போன்ற பிரச்சினைகளால், மாநகரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் திருநெல்வேலி, தச்ச நல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களிலும் சாலையி லிருந்து 1.2 மீட்டர் தூரம் தள்ளியே வீடுகள் கட்டப்பட வேண்டும். 2 ஆயிரம் சதுர அடிக்கு உள்ளாக கட்டப்படும் கடைகள் சாலையிலிருந்து நாலேகால் அடி தூரத்தில் இருக்க வேண்டும். இந்த கடைகள் சன் ஷேடு அமைக்க அனுமதியுண்டு, பால்கனி அமைக்க அனுமதியில்லை. 2 ஆயிரம் சதுர அடிக்குமேல் கட்டப்படும் வணிக நிறுவனங்கள் நான்குபுறமும் 10 அடி விட்டுத்தான் கட்டப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
விதிமீறல் நீடிப்பு
ஆனால், தற்போது பெரும் பாலான வணிக வளாகங்களும், வர்த்தக கட்டிடங்களும், வீடுகளும், கடைகளும் இந்த விதிப்படி அமைக்கப்படவில்லை. பழைய கட்டிடங்களோ, வீடுகளோ பல ஆண்டுகளுக்குமுன் கட்டப் பட்டவை என்று சொன்னாலும், தற்போது புதிதாக எழுப்பப்படும் கட்டிடங்களும் இந்த விதியை பின்பற்றி கட்டப்படவில்லை.
பார்க்கிங் வசதி இல்லை
மேலும் அந்தந்த வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு முன்புறத்திலோ அல்லது அடித்தளத்திலோ வாகனங்களை நிறுத்திக்கொள்ள இடம்விட்டிருக்க வேண்டும். இந்த விதிமுறையை ஒருசில வணிக நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றியிருக்கின்றன. பல நிறுவனங்கள் வாகன பார்க்கிங் வசதி எதையும் செய்யாமல், தங்கள் நிறுவனத்துக்கு முன் சாலையை ஆக்கிரமிப்பு செய்து, தங்கள் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தச் செய்கின்றன. இதற்கு போக்கு வரத்து போலீஸாரும் அனுமதி அளிப்பதுதான் வேதனை.
திருநெல்வேலி டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங் கோட்டை மார்க்கெட் பகுதிகளில் இந்த விதிமீறல் காணப்படுகிறது. இதனால் நடைபாதையில் நடக்க முடியாமல் பாதசாரிகள் அவதியு றுவதும், போக்குவரத்து நெரிசலும் தொடர்கதையாகி இருக்கிறது.
நெரிசலுக்கு பஞ்சமில்லை
நெல்லையப்பர் நெடுஞ்சாலை யின் இருபுறமும் நடைபாதையே இல்லாத அளவுக்கு ஆக்கிர மிப்பு செய்து கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின்முன் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் சாலை நெடுக போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லை.
டவுன் ரதவீதிகள்
திருநெல்வேலி டவுன் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் 4 ரதவீதிகளிலும் விதிமீறல்களை கண்கூடாகவே காணமுடியும். அவரவர் இஷ்டத்துக்கு இங்குள்ள கட்டிடங்களுக்கு முன் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப் பட்டு உள்ளன. நடைபாதை கடைகளும் போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்துகின்றன.
அனுமதியில்லாத ஆட்டோ ஸ்டாண்ட்
மேலும் இங்குள்ள சாலை யோரங்களை ஆக்கிரமித்து நீண்ட வரிசையில் ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆட்டோக்களுக்கு ஸ்டாண்ட் அமைக்க வட்டார போக்குவரத்து அலுவலகமோ, மாநகராட்சி நிர்வாகமோ, போக்குவரத்து காவல்துறையோ அனுமதி எதையும் வழங்கவில்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் என்ற பெயரில் பலகைகளை வைத்துக் கொண்டு திருநெல்வேலியில் முக்கிய இடங்கள் பலவற்றிலும் ஆட்டோ ஸ்டாண்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனாலும் போக்குவரத்து பிரச்சினை அதிகமாகி வருகிறது.
முக்கிய வணிக மையமான திருநெல்வேலி டவுன் ரதவீதிகளில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடும்போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இவ்வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி நிலவுகிறது.
இது குறித்து வழக்கறிஞர் அ.பிரம்மா கூறியதாவது:
திருநெல்வேலி டவுன் பகுதியில் நடைபாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 4 மாதங்களுக்குமுன் மாநகர காவல்துறை ஆணை யர் சுமித்சரண், மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கை யையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. இதுபோல் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, வண்ணார்பேட்டை, முருகன் குறிச்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த விதிமீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
மாநகரில் புதிய கட்டுமானங்கள் ஒப்புதல் வழங்கப்பட்ட விதிப்படி கட்டப்படுகிறதா என்பதை அந்தந்தபகுதி பொறியாளர்கள் கண்காணித்து மாநகராட்சிக்கு மாதத்துக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும். ஆனால் அத்தகைய அறிக்கை எதையும் அளிப்பதில்லை. பல நிறுவனங்கள் வாகன பார்க்கிங் வசதி இல்லாமலேயே அமைக்கப்படுகின்றன’ என்றார் அவர்.
சமூக ஆர்வலரும், செஞ் சிலுவை சங்க மாவட்ட தலைவரு மான டி.ஏ.பிரபாகர் கூறியதாவது:
திருநெல்வேலியில் உணவகம், ஹோட்டல், விடுதி, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை போதிய பார்க்கிங் வசதியுடன் அமைக்கப்படவில்லை. இதனால் தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர். கடைக்காரர்கள் நடைபாதையில் இரும்பு கம்பி களால் தடுப்பு அமைத்து பார்க்கிங் செய்ய அனுமதிக்கிறார்கள். அணுகுசாலை உள்ளிட்ட மாற்றுவழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT