Published : 30 May 2014 09:51 AM
Last Updated : 30 May 2014 09:51 AM
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், 2016 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக தேமுதிகவின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 4-ம் தேதி சென்னையில் நடக்கிறது.
நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேமுதிக-வுடன் கூட்டணி அமைக்க அதிமுக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டன. இவ்வாறு அனைத்து கட்சிகளாலும் விரும்பப்பட்ட தேமுதிக, நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியாமல் போனது. அக்கட்சியின் கூட்டணியில் இருந்த பா.ஜ.க மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் மட்டும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் போட்டியிட்டதால் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு, வெற்றிக்கு காரனமாக கூறப்பட்டாலும், தேமுதிக-வுக்கும் அதில் முக்கிய பங்கு இருப்பதை மறுக்க முடியாது. அதுபோல், பல இடங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள், டெபாசிட்டை இழக்காமல் காப்பாற்றியதிலும் தேமுதிக-வுக்கு முக்கிய பங்கு உண்டு.
எதிர்பார்த்தது கிடைக்கவில்லை
மக்களவைத் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றிருந்தால் அக்கட்சிக்கு உறுதியாக மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் போனது விஜயகாந்துக்கு பேரிடியாக இருந்தது.
இருந்தபோதிலும், விஜய காந்தின் மைத்துனர் சுதீஷுக்கு, மாநிலங்களவை சீட் கொடுத்து, அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று பின்னர் எதிர்பார்க்கப்பட்டது. பாஜக வெற்றிக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில், விஜயகாந்த் சால்வை அணிவித்தபோது, அவரை மோடி அன்புடன் அணைத்தது இதை உறுதிப்படுத்துவதுபோல் இருந்தது. ஆனால், அமைச்சர்கள் பட்டியலில் சுதீஷின் பெயர் எதிர்பார்த்தபடி இடம்பெறவில்லை.
மோடியின் பதவியேற்பில் பங்கேற்க மனைவி மற்றும் மைத்துனர் சுதீஷுடன் டெல்லி சென்ற விஜயகாந்த், அந்நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பியுள்ளார். விஜயகாந்தின் உடல்நிலை, முன்வரிசையில் இடம் ஒதுக்காதது என்று இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்காததே முக்கிய பின்னணி என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் வரும் 4-ம் தேதியன்று, கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப் போவதாக கட்சித் தலைமை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதில், தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியக் கூட்டம் என்பதால் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இது பற்றி தேமுதிக தரப்பினர் கூறியதாவது:-
மக்களவை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காதது வருத்தத்தைத் தந்துள்ளது. அதனால் இக்கூட்டத் தில், தோல்விக்கான காரணங் களைப் பற்றி ஆராயவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக் குள் கட்சியைப் பலப்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், கட்சியின் நிர்வாகிகளை மாற்றுவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். சுதீஷுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் பாஜக கூட்டணியில் தொடர்வது பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கருத்து கேட்கவுள்ளார். இந்த கூட்டத்துக்குப் பிறகு கட்சியில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம். 2016 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த சில மாற்றங்கள் செய்வது பற்றியும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படக்கூடும்.
இவ்வாறு கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT