Published : 21 Jul 2015 03:09 PM
Last Updated : 21 Jul 2015 03:09 PM

தமிழக தேர்தலுக்கா... மக்களின் தேறுதலுக்கா?- கருணாநிதிக்கு தமிழிசை கேள்வி

மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்ற கருணாநிதியின் அறிவிப்பு தேர்தலை நோக்கியா? தமிழக மக்களின் தேறுதலை நோக்கியா என்ற சந்தேகம் எழுகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பூரண மதுவிலக்கை கொண்டு வர முயற்சி செய்வோம் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். அவரது கருத்து சரியானதுதான்.

ஆனால், அதை கலைஞர் திடீரென்று சொல்லியிருப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

தமிழகத்தில் இந்த ஆட்சி ஒன்றில் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறது என்றால், அது டாஸ்மாக்கில்தான். மக்களைக் குடிக்க வைத்து, பல குடிகளைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது அரசு.

தமிழக பாரதிய ஜனதாக் கட்சி தமிழக முதல்வர் மறுபடியும் பதவியேற்றபிறகு முதல் முதலாக போடும் கையெழுத்து டாஸ்மாக் கடை மூடும் கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

கும்பகோணத்தில் நடைபெற்ற எங்கள் செயற்குழுவில் முதல் சிறப்பு தீர்மானமாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம்.

இந்த மாதம் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியினர் மண்டல அளவில் 504 கடைகளுக்கு முன்னால் 36000 பேர் கலந்து கொண்டு 15000 பேர் கைதாகி, தமிழகம் முழுவதும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

உணர்வு பூர்வமாக பல பெண்களும் கலந்து கொண்டார்கள். அன்று போராட்டத்தின்போதே, தமிழகத்தில் கடைசி மதுக்கடை மூடப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்தோம்.

தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது மது. மதுவினால் ஆண்கள் மலட்டுத் தன்மைக்கு ஆளாகிறார்கள். முடி முதல் நகம் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

சீக்கிரம் செத்தும் போகிறார்கள். சீக்கிரம் பெண்கள் விதவைகளாகி விடுகிறார்கள். குழந்தைகள் அனாதைகளாகி விடுகிறார்கள். பலர் சமூக விரோதிகளாக மாறி விடுகிறார்கள்.

இத்தனை அவலங்களையும் தரும் மது ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி உறுதியாக இருக்கிறது.

நேற்று கலைஞர் பூரண மதுவிலக்கை கொண்டு வர முயற்சி செய்வோம் என்று ஓர் அறிக்கைவிட்டிருக்கிறார்.

திடீரென்று இந்த அறிக்கை வந்திருக்கிறது. சமூகத்தை மது சீரழிக்கிறது என்பதை அவர் இன்று புரிந்திருக்கிறார்.மூத்த தலைவர். அவரை மதிக்கிறோம்.

ஆனால் தமிழகத்தில் ஓர் தலைமுறையையே குடிக்க வைத்து அவர்களின் வாழ்வை முடிக்க வைத்ததில் கலைஞருக்கும் பெரும் பங்கு இருக்கிறது.

ஆட்சியில் இருக்கும்போது மதுவிலக்கை கொண்டு வராதவர் ஆட்சிக்கு வந்தபின்பு மதுவிலக்கு கொண்டு வர முயற்சி செய்கிறோம் என்கிறார். அதுதான் வியப்பாக இருக்கிறது. ஏன் இந்த நேரத்தில் சொல்கிறார், எதற்காகச் சொல்கிறார், எதை நோக்கிச் செல்கிறார், தேர்தலை நோக்கியா? தமிழக மக்களின் தேறுதலை நோக்கியா என்ற சந்தேகம் எழுகிறது.

இன்று இந்தச் சமுதாயத்தை ஓர் மிகப் பெரிய குடிகார சமுதாயமாக ஆக்கியதில் கலைஞருக்கு பெரிய பங்கு இருக்கிறது.

அதனால் சமுதாயத்தை சீரழிக்கும் மதுவை ஒழிக்க பூரண மதுவிலக்கை கோரும் கலைஞர் குடிகார சமுதாயத்தை உருவாக்கியதற்காக, மன்னிப்பு கோர வேண்டிய நிலையிலும் இருக்கிறார்.

ஆனால் எது எப்படி இருந்தாலும், மதுவை ஒழிப்பதில் அத்தனைக் கட்சிகளும் ஒன்றிணைந்து திரண்டு போராட வேண்டிய நிலை இன்று வந்துவிட்டது.

அந்த நிலையில் மதுவிற்கு ஓர் தலைமுறையே சீரழிய காரணமாக இருந்த கலைஞர் கூட, ஆட்சியில் இருக்கும் போது மதுக்கடைகளை மூட முடியாது என்ற கலைஞர்கூட, மதுகடைகளை மூடுங்கள் என்று சொல்வது ஆறுதலைத் தருகிறது என்றே எடுத்துக் கொள்வோம்.

மது ஒழிப்பில் அனைவரும் மக்களோடு இணைந்து ஓரணியில் போராடுவது கூட பலன் தரும் என நினைக்கிறேன். பாரதிய ஜனதாக் கட்சி மதுவுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் தீவிரப் படுத்தும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x