Published : 03 May 2014 10:01 AM
Last Updated : 03 May 2014 10:01 AM

சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டும் அதற்கு தேவையான பணம் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் தவிக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டி கள் இந்த ஆண்டு சீனா மற்றும் துனிசியாவில் நடைபெறவுள்ளது. இதில் துனிசியாவில் நடக்கும் போட்டிகள் ஜூன் மாதம் 16ம் தேதி துவங்குகிறது. இந்தியா சார்பாக இந்த போட்டிகளில் கலந்துகொள்ள 180 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு ஏழு பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு போட்டியில் பங்கு பெறுவதற்கான நுழைவு கட்டணம், போக்குவரத்து, விசா தொகை, காப்பீட்டு தொகை ஆகியவை சேர்த்து ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் செலவாகிறது. ஆனால் அந்த அளவுக்கு பணம் இல்லாமல் வீரர்கள் பலர் தவிக்கின்றனர்.

குண்டு எறிதல் பிரிவில் தேசிய அளவில் இரண்டு முறை வெண்கலப் பதக்கங்களை வென்றதுடன் மாநில அளவில் 12 பதக்கங்களை வென்றுள்ள பூங்கொடி இதுபற்றி கூறுகையில், “நான் பெற்றோர் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் விடுதியில் வளர்ந்தேன். இதுவரை கலந்து கொண்ட எந்த போட்டியிலும் நான் தோற்றதில்லை.

தற்போது துனிசியாவில் நடக்கவுள்ள சர்வதேச போட்டியில் பங்குபெறுவதற்கு ரூ.1.40 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை. போட்டியில் கலந்து கொண்டு வந்த பின்பு தமிழக அரசு விமானச் செலவுக்கான ரூ.30 ஆயிரத்தை மட்டும் கொடுக் கும். மற்ற செலவுகளை நாங் களே பார்த்துக்கொள்ள வேண்டி யுள்ளது.

நான் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்க்கும் ரேஷன் கடையில் மாதம் ரூ. 4 ஆயிரம் சம்பளம் கிடைக் கிறது.போலியோ பாதிக்கப் பட்ட கால்களுடன் தினமும் ஸ்பான்சர் களை தேடி வருகிறேன்” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்குபெற்று வரும் மதுரையைச் சேர்ந்த எம். காமாட்சிக்கும் இதே நிலைதான். இதுவரை தேசிய, மாநில அளவில் 26 முறை காமாட்சி பதக்கங்களை வென்றுள்ளார்.

அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் பங்குபெற இவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஆனால் அதில் கலந்துகொள்ள தேவையான பணம் அவரிடம் இல்லை.

இதுபற்றி கூறும் அவர், “மதுரையில் உள்ள நரிமேடு பகுதியில் நான் வசித்து வருகிறேன். சர்வதேசப் போட்டி களில் பல முறை கலந்துகொண்டு உள்ளேன். அப்பா வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். இப்போது சீனாவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத் துள்ளது. ஆனால் போட்டிக்குத் தேவையான ரூ. 1 லட்சம் கிடைப் பது கஷ்டமாக உள்ளது’' என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சி வழங்கி வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத் தின் பயிற்சியாளர் ரஞ்சித் குமார் இதுபற்றி கூறுகையில் “சர்வதேசப் பேட்டிகளில் விளையாட்டு வீரர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கலந்து கொள்வார்கள். அதற்கு அவர்கள்தான் தங்களுடைய செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெற் றால் தான் பேரலிம்பிக்ஸ் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பொதுவாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு உதவும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x