Published : 09 Jul 2015 04:29 PM
Last Updated : 09 Jul 2015 04:29 PM

சிங்காநல்லூர் உழவர் சந்தையில் முதல்வரால் திறக்கப்பட்டு காட்சிப் பொருளான குளிர்பதனக் கிடங்கு

கோவையில் உள்ள உழவர் சந்தையில், முதல்வரால் திறக்கப்பட்ட குளிர்பதனக் கிடங்கு மூடியே இருப்பதால், காய்கறிகளை பாதுகாக்க முடியாமல் கெட்டுப்போனவற்றை விவசாயிகள் சாக்கடையில் கொட்டி வருகின்றனர்.

சிங்காநல்லூர் திருச்சி சாலையில், தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. காலை நேரத்தில் மட்டும் செயல்படும் இந்த சந்தையில் சுமார் 200 விவசாயிகள், விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சிங்காநல்லூர், ராமநாதபுரம், பீளமேடு, வரதராஜபுரம், ஒண்டிப்புதூர், இருகூர், புலியகுளம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்கறிகளை இங்கிருந்து வாங்கிச் செல்கின்றனர்.

தினமும் காலையில் 4.30 மணியிலிருந்து சந்தையில் வியாபாரம் தொடங்கிவிடும். அதிகபட்சம் காலை 10 மணி வரை சந்தை செயல்படுகிறது.

விவசாயிகளால் நேரிடையாக காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன என்பதால் அவர்கள் விற்பனை செய்த காய்கறிகள் தவிர, மீதமுள்ள காய்கறிகளை பாதுகாக்க முடியாமல் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, சந்தையிலேயே தங்களது பொருட்களை பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கு அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதன் பலனாக, 15 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் காணொலிக்காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இதையடுத்து, விற்பனையானது போக, மீதமுள்ள காய்கறிகளை இலவசமாக குளிர்பதனக் கிடங்கில் வைத்து, மறுநாள் காலையில் விற்பனை செய்து வந்தனர். ஆனால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக குளிர்பதனக் கிடங்கு பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், மீதமாகும் காய்கறிகள் குளிரூட்ட முடியாமல் கெட்டுப்போகின்றன. அவற்றை கழிவுநீர் கால்வாய்களில் கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து உழவர் சந்தையில் தக்காளி விற்பனையில் ஈடுபட்ட பழனிசாமி என்ற விவசாயி கூறும்போது, ‘கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அங்கு காய்கறிகளை வைத்துச் சென்றதால் அடுத்தநாள் அதை எடுத்து விற்க முடிந்தது.

தற்போது, காய்கறிகளை உள்ளே வைப்பதற்கு அனுமதிப்பது இல்லை. ராமநாதபுரத்தில் உள்ள வேளாண் விற்பனை அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு உத்தரவு வரவில்லை. அதனால், கிடங்குக்குள் வைக்க முடியாது என தெரிவித்து வருகின்றனர்.

சரியான காரணம் தெரியவில்லை. இதனால், விரைவிலேயே தக்காளி கெட்டுப் போய்விடுகிறது. இதேபோல், ஏனைய விவசாயிகளும் காய்கறி கெட்டுப் போவதால் பாதிப்படைந்து வருகின்றனர்’ என்றார்.

இது குறித்து தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் கலைவாணியிடம் கேட்டபோது, ‘குளிர்பதனக் கிடங்கில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x