Published : 26 Jul 2015 10:23 AM
Last Updated : 26 Jul 2015 10:23 AM

இந்தியாவில் 30% போலி வழக்கறிஞர்கள்: பார் கவுன்சில் தலைவர் அதிர்ச்சி தகவல்

நாட்டில் உள்ள வழக்கறிஞர்களில் 30 சதவீதம் பேர் போலி வழக்கறிஞர்கள் என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா கூறினார்.

பொதுநல வழக்கு குறித்த கொள்கை, நீதி, சுற்றுச்சூழல் சட்டங்களைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கறிஞர்களின் மாநாடு, சென்னையில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை வகித்த இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா பேசியதாவது:

இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களில் 30 சதவீதம் பேர், போலி பட்டத்தை வைத்துக்கொண்டு நீதிமன்றங்களில் வாதாடி வருகின்றனர். பார் கவுன்சில் கணக்கெடுப்பின்படி, 20 சதவீத வழக்கறிஞர்கள் உரிய சட்டக் கல்வித்தகுதி இல்லாமல் வழக்குகளில் ஆஜராகின்றனர். போலி வழக்கறிஞர்களாலும், நீதிமன்றத்தில் வழக்காடும் பணியில் ஈடுபடாத சட்ட பட்டதாரிகளாலும் வழக்கறிஞர் பணியின் மாண்பு தரம் தாழ்ந்துவிட்டது.

சின்னச் சின்ன பிரச்சினைகளுக் குக்கூட வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. இதனால், வழக்குதாரர்களாகிய பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண மாவட்ட அளவில், உயர் நீதிமன்ற அளவில், உச்ச நீதிமன்ற அளவில் குழுக்களை அமைத்து பல்வேறு நிலைகளில் தீர்வு காணலாம்.

சட்டப்பணிகள் ஆணையத்தின் நிர்வாகப் பொறுப்புகளை வழக்கறிஞர்களிடம் ஒப்படைப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சரிடம் பேசியுள்ளோம். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறிய அவர், அதற்கான விதிகளை வரையறை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி பேசும்போது, ‘‘வழக்கறிஞர்களின் சட்ட அறிவை மேம்படுத்த மாநில அளவில் மட்டுமின்றி மாவட்டம், தாலுகா அளவிலும் பயிற்சிகள் அளிக்க வேண்டும். இத்தகைய பயிற்சிகளுக்கான நிதியுதவியை மாநில அரசிடம் கோரலாம். இளம் வழக்கறிஞர்கள் அதிலும் குறிப்பாக முதல்தலைமுறை வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலின் ஆரம்பக் காலத்தில் சிரமப்படலாம். அதுபோன்ற சூழலில் திறமையான, ஏழை வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் நிதி உதவி செய்ய முன்வர வேண்டும். 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அவர்களை தத்தெடுக்கலாம்’’ என்றார்

இவ்வாறு நீதிபதி பானுமதி கூறினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா பேசும்போது, ‘‘கல்விக்கட்டண நிர்ணயம் தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. ஆனால், உண்மை என்ன? இன்றைய தினம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ரூ.50 லட்சம் கேட்கின்றனர். எம்எஸ், எம்டி உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கோ கட்டணம் கோடிக்கணக்கில். மயக்கம்தான் வருகிறது. சட்டத்தை அமல்படுத்துவர்கள் என்றைக்கு லஞ்சம் வாங்காமல் இருக்கிறார்களோ அப்போதுதான் எல்லாம் சரியாகும்’’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசுகையில், “எதிர்ப்புகளை வெளிப்படுத்த பல வழிகள் இருக்கையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். ஜப்பானில் தொழிலாளர்கள் சட்டையில் கறுப்புக் கொடி அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவர். வழக்கமான நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் பணியாற்றுவர். தமிழக வழக்கறிஞர்களும் அதுபோன்று இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.நாகப்பன், செல்லமேஸ்வர், எம்.ஒய்.இக்பால், வி.கோபால கவுடா, குரியன் ஜோசப், உதய் உமேஸ் லலித், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.அக்னி ஹோத்ரி, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக, தமிழ்நாடு வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபா கரன் வரவேற்றார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, துணைத் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் நன்றி கூறினார். மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x