Published : 06 May 2014 09:00 AM
Last Updated : 06 May 2014 09:00 AM

கூடுதல் விலைக்கு குளிர்பானம் விற்ற கடைக்கு ரூ.50 லட்சம் அபராதம்- தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு

விமான நிலையத்தில் குளிர் பானத்தை கூடுதல் விலைக்கு விற்ற கடைக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தேசிய நுகர் வோர் குறைதீர் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் சப்தகிரி ரெஸ்டாரன்டின் ஸ்நாக்ஸ் கடை உள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இந்தக் கடையில் டெல்லி யைச் சேர்ந்த டி.கே.சோப்ரா என்பவர், ‘ரெட் புல்’ என்ற குளிர் பானத்தை வாங்கினார். ரூ.75 விலை கொண்ட இந்த பானத்தை ரூ.150-க்கு விற்றுள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட விலை யைவிட கூடுதலாக வாங்கியதை எதிர்த்து மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றத்தில் டி.கே.சோப்ரா வழக்கு தொடர்ந்தார். நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு குளிர்பானம் விற்றதால் ஏற்பட்ட மனஉளைச் சலுக்கு ரூ.2 லட்சமும் போக்கு வரத்து மற்றும் சட்டச் செலவுக்காக ரூ.11 ஆயிரமும் சேர்த்து உணவக உரிமையாளர் தனக்கு வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் சோப்ரா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தை அணுகினார் சோப்ரா. அவரது மனுவை ஏற்றுக் கொண்ட ஆணையம், ரூ.75 விலை கொண்ட குளிர்பானத்தை ரூ.150க்கு விற்ற சப்தகிரி ரெஸ்டாரன்ட் நிறுவனத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

சப்தகிரி ரெஸ்டாரன்ட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இறக்கு மதி செய்யப்பட்ட புத்துணர்வு பானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்க அனுமதி கேட்டு சென்னை விமான நிலைய துணை மேலாளரிடம் கடிதம் கொடுக்கப் பட்டுள்ளது’’ என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜே.எம்.மாலிக், உறுப்பினர் டாக்டர் கான்டிகர் ஆகியோர் அளித்த தீர்ப்பு:

மனுதாரருக்கு குளிர்பானத்தை விற்ற கடை, சப்தகிரி ரெஸ்டாரன்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவுதான். அதை உணவகம் என்று சொல்ல முடியாது. நுகர்வோர் உட் காரவோ, தங்கவோ அந்தக் கடை யில் எந்த வசதியும் இல்லை. இப்படி எந்த வசதியும் இல்லாத ஒரு கடையில், குளிர்பானத்தை கூடுதல் விலைக்கு விற்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் குளிர்பானத்தை அதிக விலைக்கு விற்க அனு மதி கேட்டு சென்னை விமான நிலைய அதிகாரியிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் தெரி வித்தார். அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை உயர்த்தி விற்பதற் கான அதிகாரம் விமான நிலையத் துக்குக் கிடையாது. இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு, அரசு சார்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தலையிட உரிமை கிடையாது. சப்தகிரி ரெஸ் டாரன்ட், நுகர்வோரின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தி யதை அனுமதிக்க முடியாது. குளிர்பானத்தை கூடுதல் விலைக்கு விற்றதற்காக மனுதாரருக்கு ரெஸ் டாரன்ட் தரப்பில் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும், நுகர்வோர் அமைச்ச கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுகர்வோர் நலவாரிய நிதியத்துக்கு ரூ.50 லட்சம் அபராதத்தை சப்தகிரி ரெஸ்டாரன்ட் நிறுவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தீர்ப்புக்கு வரவேற்பு

தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை பலரும் வரவேற்றுள் ளனர். இதுகுறித்து இந்திய நுகர்வோர் அமைப்பின் தலைவர் தேசிகன் கூறுகையில், ‘‘தேசிய நுகர்வோர் ஆணையத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அதே நேரத்தில் நுகர்வோர் நீதிமன்றங் கள் வழங்கும் தீர்ப்புகள் குறைவாகவே உள்ளன. நுகர்வோர் நீதிமன்றங் கள், ஒரு வழக்கில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் நுகர்வோர் நீதிமன்றங்கள் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்து தீர்ப்பு அளிக்காமல் உள்ளன. இந்த நிலை மாறவேண்டும். நுகர்வோர் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும்’’ என்றார் .

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பாலு கூறுகையில், ‘‘பாதிக்கப் பட்டவர் 2 லட்சம் ரூபாய் நிவாரணம் பெற்றுத் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையம் ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அளவு அபராதம் விதிக்க தேசிய ஆணையத்துக்கு அதி காரம் உண்டு.

ஆனால், பொதுநல மனு போல விசாரித்து தீர்ப்பளிக்க முடியாது. இந்தத் தீர்ப்பு தவறானது. இதை எதிர்த்து நிச்சயம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் நிச்சயம் தடை வழங்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x