Published : 24 Jul 2015 06:56 PM
Last Updated : 24 Jul 2015 06:56 PM
மக்கள் மத்தியில் இயற்கை வேளாண்மைக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உயிரி உரங்கள் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள 15 உயிரி உர உற்பத்தி மையங்களில் 3 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்று சத்துக்களும் மிகவும் முக்கியமானவை. இந்த சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்க முன்பெல்லாம் விவசாயிகள் தொழு உரம், தழைகள் போன்ற இயற்கை உரங்களையே பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் விவசாயிகள் ரசாயன உரங்களுக்கு மாறினர்.
ரசாயன உரம் அதிரிப்பு
அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் உணவு பொருட்கள் அனைத்தும் விஷமாக மாறிவிட்டன. மண்ணின் வளமும் அழிந்துவிட்டது. நிலம், நீர், காற்று ஆகியவை மாசுப்பட்டுள்ளன.
இயற்கை வேளாண்மை
இதன் காரணமாக அண்மைக் காலமாக இயற்கை வேளாண்மை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.
இருப்பினும் இயற்கை உரங்கள் போதுமான அளவில் கிடைக்காத காரணத்தால் இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.
உயிரி உரங்கள்
இயற்கை வேளாண்மைக்கு உயிர் கொடுக்கும் அருமருந்தாக உயிரி உரங்கள் இருப்பது பல விவசாயிகளுக்கு தெரியாததே இதற்கு காரணம். `உயிரி உரங்கள் பயன்படுத்துவதால் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கலாம், மண் வளம் பெருகும், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. எல்லாவற்றையும் விட மகசூலை அதிகப்படுத்தலாம்’ என்கிறார் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வி. ஜெயக்குமார்.
தழைச்சத்து, மணிச்சத்து
இது தொடர்பாக `தி இந்து’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:
உயிரி உரங்கள் என்பது இயற்கையான நுண்ணுயிரிகள் தான். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட சில நுண்ணுயிரிகள் உயிரி உரங்களாக பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை உரமாக பயன்படுத்தும் போது காற்றில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்தை பயிருக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றுகிறது.
மகசூல் அதிகரிக்கும்
பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டோல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பயோட்டின் மற்றும் வைட்டமின் -பி ஆகியவற்றை இந்த நுண்ணுயிரிகள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளரும்.
உயிரி உரங்கள் நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உண்டாக்குகிறது. தீங்கு விளைவிக்கும் சில நுண்ணுயிரிகளை பயிர்களிடம் நெருங்கவிடாமல் இந்த உயிரி உரங்கள் தடுக்கின்றன. பயிர்களுக்கு வறட்சியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.
மாசற்ற சுற்றுப்புறச் சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இயற்கை வழி வேளாண்மையை ஊக்கப்படுத்துகிறது. மகசூல் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கிறது.
குறைந்த விலை
உயிரி உரங்கள் தமிழகத்தில் உள்ள 15 உயிரி உர உற்பத்தி மையங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன. உயிரி உரங்களை பொறுத்தவரை திட வடிவிலும், திரவ வடிவிலும் கிடைக்கின்றன.
திட வடிவிலான உயிரி உரம் 200 கிராம் கொண்ட பாக்கெட் ரூ. 6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திரவ உயிரி உரங்கள் ஒரு லிட்டர் ரூ. 280, 500 மி.லி. ரூ. 150, 100 மி.லி. ரூ. 36-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உயிரி உரங்களை விதை நேர்த்தி, நாற்றங்காலில் பயன்படுத்துதல், நாற்றின் வேரை நனைத்து எடுத்தல், நடவு வயலில் அடி உரமாக போடுதல் என பல வகைகளில் பயன்படுத்தலாம்.
நெல், சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், தென்னை, காய்கறி பயிர்கள், வாழை, பழமரங்கள், சூரியகாந்தி, எள், நிலக்கடலை, பருத்தி என அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் அறிவுரையின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் தேவையான உயிரி உரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாங்கி பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்’ என்றார் அவர்.
15 உற்பத்தி மையங்கள்
விவசாயிகளுக்கு போதுமான அளவு உயிரி உரங்கள் கிடைக்கும் வகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 15 உயிரி உர உற்பத்தி மையங்களிலும் மொத்தம் 3000 டன் உயிரி உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி உயிரி உர உற்பத்தி மையத்தின் வேளாண்மை அலுவலர் என்.மலர்விழி `தி இந்து’ நாளிதழிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தென்காசி, தூத்துக்குடி உட்பட 15 இடங்களில் உயிரி உர உற்பத்தி மையங்கள் உள்ளன. தூத்துக்குடி உயிரி உர உற்பத்தி மையத்தில் பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லத்தில் 2 வகை, ரைசோபியத்தில் 2 வகை என 5 வகையான திட உயிரி உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் உயிரி உரங்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
தினமும் இங்கு 1 டன் முதல் ஒன்றரை டன் வரை உயிரி உரங்கள் உற்பத்தி செய்யப்படும், சீசன் நேரத்தில் 2 டன் வரை உற்பத்தி செய்யப்படும். கடந்த ஆண்டு இங்கு 217 டன் உற்பத்தி செய்யப்பட்டது.
3 ஆயிரம் டன் இலக்கு
இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 15 உற்பத்தி மையங்களிலும் மொத்தம் 3 ஆயிரம் டன் உயிரி உரங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மட்டும் 253.24 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உரத்தை விவசாயிகள் பயன்படுத்தும் முறை பாக்கெட்டுகளிலேயே தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். இந்த உயிரி உரங்கள் விலை மிக குறைவு. அதே நேரத்தில் பயன்கள் அதிகம். இயற்கை விவசாயத்துக்கு கைகொடுக்கும் உயிரி உரங்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்த வேண்டும்’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT