Published : 25 Jul 2015 01:56 PM
Last Updated : 25 Jul 2015 01:56 PM

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் விசாரணை அறைகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி கேமரா) பொருத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் விசாரணை என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் விசாரணை அறைகளில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி கேமரா) பொருத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

குற்றவாளிகள் சட்டத்தை மீறும் போது அவர்கள் மீது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பை சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பினரே சட்டத்தை மீறும் போது அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது இந்திய ஜனநாயக நடைமுறைகளின் குறைபாடுகளில் ஒன்று.

மாலை 6.00 மணிக்கு மேல் எவரையும் கைது செய்யக்கூடாது; விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் எந்த வகையிலும் துன்புறுத்தப் படக்கூடாது என்று டி.கே. பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால், முன்னாள் முதல்வரையே நள்ளிரவில் வீடு புகுந்து கைது என்ற பெயரில் இழுத்துச் சென்ற கொடுமைகளை தமிழகம் பார்த்திருக்கிறது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் காவல் நிலையங்களில் வைத்து துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கதையாகி கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 பேரும், 2012ஆம் ஆண்டில் 7 பேரும், 2013ஆம் ஆண்டில் 15 பேரும் காவல் நிலையங்களுக்கு விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தி கொல்லப்பட்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் சையது முகமது என்ற இளைஞர் காவல் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டது, சென்னையை அடுத்த நீலாங்கரையில் சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து காவல் ஆய்வாளர் சுட்டது போன்றவை காவல்துறையினரின் மனித உரிமை மீறலுக்கு உதாரணமாக திகழ்பவை. சிதம்பரம் அண்ணாமலை காவல் நிலையத்தில் பத்மினி என்ற ஏழைப் பெண் காவலர்களால் சிதைக்கப்பட்ட கொடுமையை நம்மால் மறக்க முடியாது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அடுத்த இரு ஆண்டுகளுக்குள் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் விசாரணை அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் பட்சத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும் என்று நம்பலாம்.

ஆனால், காவல்துறையினரால் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை தடுக்க இது போதுமானதல்ல. ஏனெனில், அண்மைக் காலங்களில் காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களும், சட்டவிரோத விசாரணைகளும் காவல் நிலையத்திற்கு வெளியில் தான் நடைபெறுகின்றன.

உதாரணமாக, திருக்கோவிலூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் நடுக்காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

அண்மையில் ஆம்பூரில் விசாரணை என்ற பெயரில் ஷமில் அகமது என்ற இளைஞர் இறக்கும் அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டதும் காவல்நிலையத்தில் நடக்கவில்லை; காவல்நிலையத்திற்கு வெளியே விடுதியில் வைத்து தான் கொடுமைப்படுத்தப்பட்டார். இத்தகைய மனித உரிமை மீறல்களையும் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் விசாரணை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் அனைத்துக் கொடுமைகளையும் தடுக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

1. கைது நடவடிக்கை, விசாரணை தொடர்பாக டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களும் காவலர்களால் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

2. அனைத்துக் காவல்நிலையங்களிலும் இரு பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வசதியாக காவல்துறையில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

3. வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு வெளியே ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தும் முறையை கைவிட வேண்டும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தப்பட்ட, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டோருக்கும், கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்படப்பட வேண்டும்.

5. டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்து காவல் நிலைய அதிகாரிகளுக்கு காவல்துறை உயரதிகாரிகள் பயிற்சி அளிப்பதுடன், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை சுற்றறிக்கையாகவும் அனுப்ப வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x