Published : 07 Jul 2015 01:08 PM
Last Updated : 07 Jul 2015 01:08 PM

அரசு மனுவில் தவறை முதல்வரே ஒப்புக்கொள்கிறாரா?- புலிகள் விவகாரத்தில் கருணாநிதி கேள்வி

முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசு மனுவில் விடுதலைப் புலிகள் குறித்து உள்ள தவறை முதல்வர் ஜெயலலிதாவே ஒப்புக்கொள்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "முல்லை பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து என்பதை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும், உச்ச நீதி மன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சரும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சருமான பன்னீர்செல்வம் பெயரால் ஓர் அறிக்கை வெளிவந்துள்ளது.

இடைவெளியில் முதலமைச்சராக இருந்த போது வாயைத் திறக்காத பன்னீர்செல்வம், தன்னுடைய தம்பி ஓ.ராஜா சம்பந்தப்பட்டுள்ள தற்கொலை வழக்குப் பற்றியும், தன்னுடைய உறவினர் எனச் சொல்லப்படும் காவல் துறை அதிகாரி ஒருவர் செம்மரக் கடத்தலில் தொடர்புள்ள வழக்கு பற்றியும் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தைப் போக்காத பன்னீர்செல்வம், இப்போது முல்லை பெரியாறு பிரச்சினையில் அறிக்கை விடுகின்ற அளவுக்கு துணிச்சல் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த அறிக்கையில் தேவையில்லாமல் என் மீது விழுந்து குதறியிருப்பது ஏன் என்று புரியவில்லை.

5-7-2015 தேதியிட்ட எனது அறிக்கையில் முக்கியமாக "மத்திய அரசு, முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பினை வழங்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இனியாவது அதற்கு மத்திய அரசு முன்வரவேண்டும், தமிழக அரசும் இதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்" என்று தான் கூறியிருந்தேன்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் மீது தமிழக அரசு குற்றம் சுமத்தவில்லை என்றும், எனது அறிக்கையைத் தொடர்ந்து வேறு சில தலைவர்களும் அறிக்கை விடுத்திருப்பதாகவும் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 4-7-2015 அன்று வெளியிட்ட அறிக்கையில், "உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவில் முல்லை பெரியாறு அணைக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினராலும், விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளாலும்

ஆபத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இது மிகவும் அபாண்டமான குற்றச்சாற்று ஆகும். தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாற்றை தமிழக அரசு கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்" என்று தெரிவித்தார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 4-7-2015 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், முல்லை பெரியாறு அணைக்குத் தீவிர மதவாத அமைப்புகளாலும் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளாலும் ஆபத்து ஏற்படும் என்பதால், மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின் பாதுகாப்பைக் கோருவதாகத் தெரிவித்திருப்பது அக்கிரமம் ஆகும்" என்றே கூறியதோடு, அதனை எதிர்க்கும் வகையில் மதுரையில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

அ.தி.மு.க. அரசுக்கு மிகவும் நெருக்கமான தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் 4-7-2015 அன்று வெளியிட்ட அறிக்கையில், "விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகளால் முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற தமிழக அரசின் வாதம் ஏற்புடையது அல்ல" என்று கூறியிருக்கிறார்.

இன்னும் சொல்லப் போனால் இத்தனை செய்திகளுக்கும், அறிக்கைகளுக்கும் பிறகு தான் நான் "விடுதலைப் புலிகளைப் பற்றி தேவையில்லாமல் குறை கூறுவது வீண் வம்பை விலைக்கு வாங்கும் செயல்" என்று அறிக்கை விடுத்தேன்.

இதற்குத் தான் நிதியமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், "ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வந்தவுடன், முதல் அமைச்சர் அம்மா இதுபற்றி என்னிடமும் அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார்கள். அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலைத் தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது என்பது முதலமைச்சர் அம்மாவிடமும் எடுத்துச் சொல்லப்பட்டது.

அந்த அறிக்கையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லைப் பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு, பத்தி 4.4-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும், அவர்கள் இறுதிப் போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது" என்று விளக்கியிருக்கிறார்.

மத்திய நுண்ணறிவுப் பிரிவின் ஆய்வு அறிக்கையில் உள்ள இந்தச் செய்திகளைத் தேடி எடுத்து, உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் இணைப்பதற்கு என்ன காரணம்? மத்திய உளவுப் பிரிவின் அந்தத் தகவல்களை தமிழக அரசு நம்பிய காரணத்தால் தானே, உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலே அது இணைக்கப்பட்டது!

மேலும் உச்ச நீதி மன்றத்தில் முல்லை பெரியாறு பற்றி தாக்கல் செய்த மனு பற்றியோ, அத்துடன் சேர்க்கப்பட்டுள்ள இணைப்புகள் பற்றியோ முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பதும், தற்போது தான் அமைச்சரையும் உயர் அதிகாரிகளையும் அழைத்து முதலமைச்சர் அது பற்றி கலந்துரையாடியிருக்கிறார் என்பதும் நிதியமைச்சரின் அறிக்கையிலே இருந்தே தெளிவாகிறது.

முல்லை பெரியாறு போன்ற முக்கியமான பிரச்சினையில் முதலமைச்சருக்கே தெரியாமல், தமிழக அரசின் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது எவ்வாறு சரியாகும்? முதலமைச்சரின் கவனத்திற்கே கொண்டு செல்லாமல் தமிழக அரசின் சார்பில் வேறு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளனவோ?

நுண்ணறிவுப் பிரிவின் 4.4-ல் உள்ள குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தை புதிய மனுவிலே குறிப்பிடும்படி முதலமைச்சர் ஜெயலலிதாவே, கூறியிருப்பதாகவும் பன்னீர்செல்வம் தனது அறிக்கையிலே கூறுகிறார். அப்படியென்றால், முதலில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறு நடந்துள்ளது என்பதை முதலமைச்சரே ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தம். மிகப் பெரிய இந்தத் தவறுக்கு யார் பொறுப்பு?

துறையின் அமைச்சரான பன்னீர்செல்வம் தானே பொறுப்பு! தவறு ஏன், எப்படி நேர்ந்தது என்பதற்கான விளக்கத்தை அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டுமே தவிர, எப்போதோ நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் குறிப்பிட்டு அதற்குப் பல முறை விளக்கங்களும், பதில்களும் அளிக்கப்பட்ட பிறகும் அதையே பிடித்துக் கொண்டு தொங்கப் பார்ப்பதும், சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்ள நினைப்பதும் நல்லதல்ல!

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தவறான அறிக்கைக்கு யார் பொறுப்பு? முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஒப்புதல் பெறாமல் உச்ச நீதிமன்றத்திலே முக்கிய மனுவினை தாக்கல் செய்ததற்கு யார் காரணம்? இதற்கான விளக்கம் தான் தேவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x