Published : 02 Jul 2015 08:36 AM
Last Updated : 02 Jul 2015 08:36 AM

உடன்குடி அனல் மின்நிலைய டெண்டருக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், உடன் குடியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் உடன் குடியில் 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன் புதிய அனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் டெண்டர் கோரியது. அதில், சீன இந்திய கூட்டு நிறுவனமும், பெல் நிறுவனமும் பங்கேற்றது. சீன நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், தொழில்நுட்ப காரணங்களைக் கூறி அந்த டெண்டரை மின்வாரியம் ரத்து செய்தது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், 2-வது டெண்டரை மின்வாரியம் கோரியது. இதில், பெல் நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் சீன நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவில், “உடன்குடி அனல் மின்நிலைய டெண்டர் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. எனவே, புதிய டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து, புதிய டெண்டரைத் திறக் கக்கூடாது என்றும் உத்தர விட்டிருந்தார். இவ்வழக்கில் நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவு:

டெண்டரைப் பொருத்த வரை ஆலோசனை நிறுவனம் அளித்த மாற்று ஏற்பாட்டின்படி புதிய டெண்டர் விடுவதைத் தவிர்த்தி ருக்கலாம். அதைவிடுத்து புதிய டெண்டர் விடப்பட்டால் கூடுதல் செலவாகியிருக்கிறது. இதுவரை டெண்டர் விடப்பட்டது, ஆலோ சனை கோரியது, வரி உள்பட மொத்தம் ரூ.33 லட்சத்து 42 ஆயிரத்து 864 செலவாகியுள்ளது. இது, பொது நலனுக்கு எதிரான தாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்கள் பணத்தில்தான் செயல்படுகிறது. இவ்வழக்கைப் பொருத்தவரை பணமும், நேரமும் விரயமாவதைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறி விட்டார்கள். எனவே, உடன் குடியில் அனல்மின் நிலையம் அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் கடந்த மார்ச் மாதம் விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இத்தடை அமலில் இருக்கும் என்று நீதிபதி எம்.சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x