Published : 06 Jul 2015 10:50 AM
Last Updated : 06 Jul 2015 10:50 AM

நதிகள் இணைப்பு திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்: விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர் தின பேரணி மற்றும் மாநில மாநாடு கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. கார்னேசன் திடலில் நடந்த மாநில மாநாட்டுக்கு சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீராம், சென்னையன், தருமபுரி நிர்வாகிகள் செங்கோடன், சக்திவேல், டிராக்டர் விவசாயிகள் சங்கத் தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழக முதல்வர், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகள் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த விவசாயிகளுக்கு நிவாரணமும், உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு மணிமண்டபமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், விவசாயத்தைக் காக்கவும் தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

மானியத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புபடி காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி கண்காணிப்பு குழுவும் காலதாமதமின்றி அமைத்து, மாதவாரியாக கர்நாடகம், தமிழ கத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கிட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி கிருஷ்ணகிரி, வேலூர் உட்பட 5 மாவட்ட நீர் ஆதாரங்களை சீர்குலைக்கும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தொடர்ந்து தமிழக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் கேரள அரசின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்க வேண்டும். முல்லை பெரியாறு, தேக்கடி அணைகளுக்கு மத்திய படை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தேசிய நதிகளை இணைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடி யாக நிறைவேற்ற வேண்டும். முதற்கட்டமாக தென்னக நதிகளை இணைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உட்பட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரின்போது கோட்டை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x