Published : 24 Jul 2015 10:46 AM
Last Updated : 24 Jul 2015 10:46 AM

சாலையில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம் - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

சாலையில் ஓடும் கழிவுநீரால் துர்நாற்றம்

அம்பத்தூர் அடுத்த ஒரகடம் கிரிம்சன் காலனியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீர் வாரியத்தால் முறையாக கொண்டு செல்லப்படாததால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றமும், சாலையில் நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகர்,அம்பத்தூர்

***

அதிகாலையிலேயே மதுக்கூடங்கள்

காஞ்சிபுரம் மேட்டுத் தெரு பஸ் நிறுத்தம் மற்றும் செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் மதுக்கூடங்கள் அரசு விதிகளை மீறி அதிகாலை 5 மணிக்கே திறக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுவை இரவே வாங்கி வைத்துக்கொள்ளும் இந்த மதுக்கூடங்கள், அதிகாலை 5 மணிக்கே விநியோகத்தை தொடங்கி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் காலையிலிருந்தே மது அருந்துவோர் கூட்டம் அதிகமாக உள்ளது. இவர்களால் பஸ் நிறுத்தங்களில் நிற்போர் அச்சத்துக்குள்ளாகின்றனர். எனவே அரசு விதிகளின்படி காலை 10 மணிக்கு பிறகே மதுக்கூடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகர்,காஞ்சிபுரம்.

***

பழுதடைந்த சாலைகளால் ஆபத்து

திருவள்ளூர்- செங்குன்றம் இடையேயான சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. 1 அடி ஆழம் வரை பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அச்சாலையில் மின் விளக்குகளும் எரிவதில்லை என்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். அண்மையில் கூட, பைக்கிலிருந்து விழுந்தவர் மீது லாரி மோதி அவர் இறந்துள்ளார். இச்சாலையில் இயக்கப்படும் கார்களும் பழுதடைந்து அதிக செலவை ஏற்படுத்துகின்றன. மழைக் காலங்களில் அப்பள்ளங்களில் மழை நீரும் தேங்கிவிடுகிறது. அதனால் இச்சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.கனகராஜ்,செங்குன்றம்.

***

லாரியில் கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுநீர்

பெசன்ட்நகர் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பின் பின்புறம் கழிவுநீர் குழாய் செல்கிறது. பல்வேறு இடங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் கழிவுநீர் இக்குழாயில் விடப்படுகிறது. இதனால் கழிவுநீர் நிரம்பி வெளியேறி அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. அதனால் லாரிகளில் கொண்டுவந்து இங்கு கழிவுநீர் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

வாசகி, பெசன்ட்நகர்.

நேரடி பஸ் வசதி இல்லாததால் அவதி

கே.கே.நகரில் இருந்து கோயம்பேடு, அண்ணாநகர், தாம்பரம் செல்ல நேரடி பஸ் வசதி இல்லை. இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் அசோக் பில்லர் அல்லது வடபழனி சென்று, வேறு பஸ் பிடித்துத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல நேரடி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

சி.தமிழ்மணி,கே.கே.நகர்.

***

குப்பைமேடாய் மாறிய சாலை

திருவள்ளூர் அடுத்த புட்லூர்-கோமதியம்மன் நகரில் பொதுமக்கள் சாலையிலேயே குப்பைகளை வீசி எரிந்து வருகின்றனர். மழைக் காலங்களில் இக்குப்பைகளில் இருந்து வெளியேறும் நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கண்ணாடி பாட்டில் ஓடுகளும் சாலையில் கிடக்கின்றன. இதனால் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையில் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாசகர், புட்லூர்.

***

மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்

போரூர்- கத்திப்பாரா சாலையில் இருந்து முகலிவாக்கம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைபடாமல் இருக்க மாற்றுப் பாதை அமைக்காமல், சிறிய அளவில் உள்ள தகடின் மேல் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட ஒருவர் பள்ளத்தில் விழுந்து இறந்துவிட்டார். எனவே இப்பகுதியில் மாற்றுப் பாதை அமைக்க வேண்டும்.

வாசகர்,முகலிவாக்கம்.

அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x