Published : 09 Jul 2015 05:54 PM
Last Updated : 09 Jul 2015 05:54 PM

மதுவின் பிடியிலிருந்து இளைய தலைமுறையை மீட்க வேண்டும்: அன்புமணி

படிக்க வேண்டிய மாணவச் செல்வங்களை குடிக்க வைப்பதைவிட மிகப்பெரிய பாவம் எதுவும் இல்லை. இப்பாவத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு பதவியில் நீடிக்கும் உரிமை இல்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில், திராவிடக் கட்சிகளால் வளர்த்தெடுக்கப்பட்ட மது என்ற அரக்கனின் பிடியில் சிக்கி மக்கள் படும்பாடு வேதனையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

பால்மணம் மாறாத பிஞ்சுகளுக்கு மனித மிருகங்களால் மது புகட்டப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே கோவையில் பள்ளி மாணவி ஒருவர் குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களில் 32.1 விழுக்காட்டினரும், சிறுமிகளில் 10.60 விழுக்காட்டினரும் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதை பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ள நான், மதுவின் பிடியிலிருந்து இளைய தலைமுறையை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

ஆனால், அதைப்பற்றிய அக்கறையில்லாமல் மது விற்பனை இலக்கை எட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் தெருவுக்குத் தெரு கடைகளைத் திறந்து அரசே மதுவை விற்பதன் விளைவு தான் குழந்தைகளுக்கு மது புகட்டப்பட்டதும், மாணவி குடிபோதையில் ரகளை செய்ததும். இவை கடும் கண்டனத்திற்குரியவை.

கோவையில் ரகளை செய்த மாணவி நேற்று முன்நாள் காலையிலேயே தமது தோழிகள் சிலருடன் பள்ளிச்சீருடையில் கோவை வணிக வளாகத்திலுள்ள மதுக்கடை ஒன்றுக்கு சென்று மாலை வரை அமர்ந்து மது அருந்தியிருக்கிறார்.

12 ஆம் வகுப்பு தான் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டது என்பதால் அதற்கானத் தேர்வுகளில் தான் மாணவர்கள் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அது குறித்த கவலை எதுவுமின்றி, பொது இடத்தில் தோழிகளுடன் அமர்ந்து மது அருந்தும் நிலைக்கு அந்த மாணவி சென்றிருக்கிறார் என்றால் தமிழகத்தின் நிலை கண்ணீரை வரவழைக்கிறது.

டாஸ்மாக் விதிகளின்படி 21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும். இது தொடர்பான வழக்கு ஒன்றில் இந்த விதியை கட்டாயமாக கடைபிடிப்பதாக சென்னை உயர்நீதின்றத்தில் தமிழக அரசு வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், ஒரு 16 வயது மாணவி, சக வயதுடைய மாணவிகளுடன் டாஸ்மாக் சென்ற போது அவருக்கு மது விற்பனை செய்ததும், அவரை மது அருந்தும் இடத்தில் அமர்ந்து மது குடிக்க அனுமதித்ததும் குற்றமா... இல்லையா? மாணவர்களை சீரழிக்கும் இந்தக் குற்றத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் பொறுப்பேற்க வேண்டுமா.... வேண்டாமா?

மறுபுறம், உலக அளவில் தடை செய்யப்பட்ட மது வகைகளும், சிகரெட்டுகளும் தமிழகத்தில் தாராளமாக விற்கப்படுவதாகவும், தமிழக சந்தையில் இவற்றின் அளவு 20% என்றும் இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இன்னொருபுறம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்களால் நடத்தப்படும் மிடாஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மது வகைகளில் ஆல்கஹால் சதவீதம் அனுமதிக்கப்பட்ட அளவான 42.8 விழுக்காட்டை விட அதிகமாக 46% இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

படிக்க வேண்டிய மாணவச் செல்வங்களை குடிக்க வைப்பதைவிட மிகப்பெரிய பாவம் எதுவும் இல்லை. இப்பாவத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு பதவியில் நீடிக்கும் உரிமை இல்லை. இந்த உரிமை வரும் சட்டமன்றத் தேர்தலில் நிரந்தரமாக பறிக்கப்படுவது உறுதி'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x