Published : 06 Jul 2015 06:23 PM
Last Updated : 06 Jul 2015 06:23 PM
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 77-வது இடத்தில் வெற்றிபெற்று மதுரை இளைஞர் என்.எஸ்.கே. உமேஷ் சாதனை படைத்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இத்தேர்வில் மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த என்.எஸ்.கே. உமேஷ் (24), அகில இந்திய அளவில் 77-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது மூன்றாவது முயற்சியில் உமேஷ், இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இவரது தந்தை கேசவன், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. தாயார் பானுமதி, சிண்டிகேட் வங்கியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். சேலத்தில் பள்ளிப்படிப்பை முடித்த உமேஷ் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பொறியியல் பட்டப்படிப்பை 2011-ல் முடித்தார். பட்டப்படிப்பை முடித்து வேலைக்குச் செல்லாமல் சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படித்து தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றது குறித்து உமேஷ், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறுகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் நாம் ஏன் அரசு நிர்வாகத்தில் பங்கெடுத்து நாட்டுக்காக உழைக்கக்கூடாது என்ற எண்ணம் உதித்தது. பள்ளியில் படிக்கும்போது ஐஏஎஸ் அதிகாரியாக முயற்சி செய் என ஆசிரியர்கள் என்னிடம் கூறினர். இந்த உந்துதல் காரணமாக பொறியியல் படிப்பை முடித்ததும், வேலைக்குச் செல்லாமல் ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக படிக்கத் தொடங்கினேன்.
ஐஏஎஸ் தேர்வு பயிற்சிக்காக பலரைப் போல நானும் சென்றேன். ஆனால், சில மாதங்களிலேயே திரும்ப வந்துவிட்டேன். பின்னர், சென்னையில் நண்பர்களுடன் தங்கி படித்தேன். இரண்டுமுறை தேர்வில் தோல்வியடைந்தபோது, பயிற்சிக்குச் செல்லாததால் வெற்றி கிடைக்கவில்லை என பெற்றோர் கூறினர். இதனால் மறுபடியும் பயிற்சிக்கு சென்றேன். அப்போதும், ஒரு மாதத்தில் வெளியேறிவிட்டேன். தொடர்ந்து, வீட்டிலேயே படித்து தற்போது 3-வது முயற்சியில் வெற்றிபெற்றுள்ளேன்.
அரசியல் அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக தேர்வு செய்தேன். பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடிப்பிடித்து வாங்கி படித்தேன். ஐஏஎஸ் அதிகாரிகள் தான் நாட்டின் எதிர்காலம் என்ற எழுத்தாளர் சுஜாதாவின் கருத்து என்னை வெகுவாகக் கவர்ந்தது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால் நிச்சயம் வெற்றிபெறலாம். மேலும், தோல்வியை கண்டு துவளக் கூடாது. தொடர் முயற்சி வெற்றியை தரும் என்றார் உமேஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT