Published : 03 Jul 2015 08:27 AM
Last Updated : 03 Jul 2015 08:27 AM

சென்னை போலீஸ் கெடுபிடியால் அண்டை மாவட்டங்களில் பதுங்கும் ரவுடிகள்

ரவுடிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் சென்னை நகர போலீஸார் தீவிரம் காட்டுவதைத் தொடர்ந்து, ரவுடிகள் அண்டை மாவட்டங்களுக்கு தப்பிச் செல்கின்றனர்.

ரவுடிகளை வேட்டையாடுவதில் சென்னை மாநகர காவல்துறை கடந்த சில மாதங்களாக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மிகப்பெரும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய பலர் போலீஸில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ளனர். அதே நேரம், போலீ ஸின் கெடுபிடிக்கு பயந்து ரவுடிகள் பலர் அண்டை மாவட்டங்களுக்குப் படையெடுக்கின்றனர். இதனால் அண்டை மாவட்டங்களில் குற்றச் செயல்கள் தலைதூக்கும் அபாயமிருக் கிறது.

சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சென்னை நகர குற்றப் பிரிவின் துணை கமிஷனர் ஜெயகுமார் கூறுகையில், ‘‘சென்னை மாநகர போலீஸின் ரவுடி ஒழிப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் நடமாடும் ரவுடிகளை ஏ ப்ளஸ், ஏ , பி, மற்றும் சி என நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர். இதன்படி 2-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்புடைய மற்றும் கேங் லீடர் களாக செயல்படும் நபர்களை ஏ ப்ளஸ் என்றும், 2 மற்றும் அதற்குக் குறைவான கொலை வழக்குகளில் தொடர் புடையதுடன் தற்போதும் தீவிர செயல்பாட்டில் உள்ள ரவுடிகளை ஏ பிரிவினர் எனவும் வகைப்படுத்தியுள்ளனர். இப்போதைக்கு இந்த 2 வகை ரவுடிகளை பிடிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டும் போலீஸார், தற்போது சுறுசுறுப்பாக இல்லாத பி மற்றும் சி வகை ரவுடிகளை கண்காணிப்பது, எச்சரிப்பது என தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றார்.

450 ரவுடிகள் பட்டியல்

போலீஸ் கமிஷனரின் உத்தரவுப் படி ஒரு துணை கமிஷனரின் மேற்பார்வையில் 4 இன்ஸ்பெக்டர் களின் தலைமையிலான தனிப்படை போலீஸார் ரவுடிகளை வேட்டையாடி வருகின்றனர். கடந்த ஓராண்டாக தலை மறைவாக இருக்கும் சுமார் 450 முக்கியமான ரவுடிகளின் பட்டியலை தயாரித்துள்ள போலீஸார், அவர்களின் மறைவிடத்தைத் தேடிச் சென்று கைது வேட்டை நடத்தி வருகின்றனர்.

அப்படி சமீபத்தில் கைது செய்த தாத்தா செந்தில் (என்கிற செந்தில் குமார்) என்பவர் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய 10 ரவுடிகளில் குறிப்பிடத்தக்கவர். சுமார் 25 கொலை வழக்குகளில் தொடர்புடையதாக சொல்லப்படும் செந்தில், கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ரவுடி லிங்கம், பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியன் ஆகியோர் உட்பட பலரது கொலை வழக்குகளில் தொடர்புடையவர்.

இப்படி பயங்கர கொலை வழக்குகள் பலவற்றில் தொடர்புடைய செந்தில் 2008-ம் ஆண்டு ஒரே ஒருமுறை மட்டும் போலீஸில் சிக்கி சிறைக்குச் சென்றுள்ளார். பிறகு, ஜாமீனில் வெளிவந்தவர் அதன்பிறகு போலீசின் பிடியில் சிக்கவே இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் அருகே காரில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்ற செந்திலை ரவுடி ஒழிப்புப் பிரிவு போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

சமீபத்தில் போலீஸ் வேட்டையில் சிக்கியுள்ள ரவுடிகளில் டி.பி.சத்திரம் தட்சிணாமூர்த்தி, குரங்கு கார்த்திக் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இதேபோல் கடந்த ஓராண்டில் சுமார் 350 ரவுடிகளை கைது செய்துள்ள போலீஸார் மேலும் சுமார் 100 ரவுடிகளுக்கு குறி வைத்துள்ளனர்.

சென்னை மாநகர போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் கதிகலங்கிப்போயுள்ள ரவுடிகள் அண்டை மாவட்டங்களான காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்குச் சென்று பதுங்க ஆரம்பித்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் சென்னை போலீஸார் அண்டை மாவட்ட போலீஸாரையும் உஷார்படுத்தி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x