Published : 01 Jul 2015 07:37 AM
Last Updated : 01 Jul 2015 07:37 AM

வாகனம் ஓட்டுவதில் இருந்த ஆர்வமே மெட்ரோ ரயில் பைலட்டாக மாற்றியது: முதல் மெட்ரோ ரயிலை இயக்கிய பிரீத்தி உற்சாகம்

சிறு வயதில் வாகனம் ஓட்டுவதில் இருந்த ஆர்வமே என்னை மெட்ரோ ரயில் பைலட்டாக மாற்றியுள்ளது என்று சென்னையின் முதலாவது மெட்ரோ ரயிலை இயக்கிய பிரீத்தி கூறியுள்ளார்.

ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்ட முதல் மெட்ரோ ரயிலை சென்னையை சேர்ந்த பிரீத்தி (28) என்பவர் ஓட்டினார். இவர், சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது தந்தை அன்பு, தாய் சாந்தி.

சென்னையின் முதல் மெட்ரோ ரயிலை இயக்கிய அனுபவம் குறித்து பிரீத்தி கூறியதாவது:

நான் சென்னை தரமணியில் உள்ள தர்மாம்பாள் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளோமா பெற்றேன். மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்திய தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். பின்னர், மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சிறப்பு தேர்விலும் வெற்றி பெற்றேன். 2013 செப்டம்பரில் டெல்லியில் மெட்ரோ ரயிலை இயக்க பயிற்சி பெற்றேன்.

இதையடுத்து கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சென்னை மெட்ரோ ரயிலில் பயிற்சி பெற்றேன்.

சிறு வயதில் இருந்தே வாகனங்களை ஓட்டுவது எனக்கு பிடிக்கும். முதலில் அப்பாவின் சைக்கிளை எடுத்து ஓட்டினேன். பின்னர், மாமாவின் பைக்கை ஓட்டினேன். ஆட்டோவையும் ஓட்டினேன். மெட்ரோ ரயிலை இயக்க பைலட் தேர்வு எழுதுகிறேன் என்றதும் என் பெற்றோர் கொஞ்சம் தயங்கினர். தற்போது நான் பைலட்டாக தேர்வாகியிருப்பதில் அவர்கள் மிகவும் மிகழ்ச்சியடைந்துள்ளனர். சிறிய வயதில் வாகனங்களை ஓட்டுவதில் இருந்த ஆர்வம் என்னை மெட்ரோ ரயில் பைலட்டாக மாற்றியுள்ளது.

வேலையை பொருத் தவரையில் ஆண், பெண் பாகுபாடு இல்லை. திறமையுள்ள இருபாலாரும் அனைத்து பணிகளையும் செய்யலாம். சென்னை மெட்ரோ ரயிலை முதல்வர் தொடங்கிவைக்க, நான் முதலில் ஓட்டியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும். இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x