Published : 06 May 2014 08:55 AM
Last Updated : 06 May 2014 08:55 AM
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பொன்முருகன் (44). ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். கடந்த மாதம் 30-ம் தேதி பொன்முருகன் மாதவரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 2-ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை நரம்பியல் துறையில் அனுமதித்து வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவமனை நரம்பியல் துறையில் திங்கள்கிழமை அதி காலை 5.30 மணியளவில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் காலை 6.30 மணி அளவில் பொன்முருகன் திடீரென இறந்தார்.
“செயற்கையாக சுவாசம் அளிக்கும் வென்டிலேட்டர் கருவி மின்தடை காரணமாக வேலை செய்யவில்லை. எனவே சுவாசிக்க முடியாமல் பொன்முருகன் இறந்துவிட்டார்” என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக மருத்துவ மனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது:
பொன்முருகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. தலையின் இரு புறங்களிலும் எலும்புகள் சேதமடைந்திருந்தன. தலைக்கு உள்ளே ரத்தக் கசிவும் இருந்தது. அவர் உயிருக்கு ஆபத் தான நிலையில்தான் சிகிச்சை பெற்று வந்தார். மின்தடையை காரணம் காட்டி உறவினர்கள் பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.
மின் தடை ஏற்பட்டாலும் வென்டிலேட்டர் கருவி பேட்டரி மூலம் 2 மணி நேரம் இயங்கும். அதுமட்டுமின்றி ஜெனரேட்டரும் இருப்பதால் அதன் மூலம் அனைத்து மருத்துவக் கருவிகளும் இயங்க வைக்கப்படும்.
இவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் மேலும் 5 பேருக்கு வென்டி லேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். எனவே மின் தடைக்கும், பொன்முருகன் உயிரிழந்ததற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT