Published : 11 Jul 2015 10:45 AM
Last Updated : 11 Jul 2015 10:45 AM

புற்றுநோய் கண்டறிய உதவும் ஐசோடோப் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம்: தூத்துக்குடி கனநீர் ஆலையில் உருவாக்கம்

புற்றுநோய் கண்டறிய உதவும் ஐசோடோப் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தை தூத்துக்குடி கனநீர் ஆலை உருவாக்கியுள்ளதாக இந்திய கனநீர் வாரிய இயக்குநர் பி.ஆர்.மொஹந்தி தெரிவித்தார்.

இந்திய அணுசக்தி துறை உருவானதன் 60-வது ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி கனநீர் ஆலை சார்பில் சமுதாய வளர்ச்சியில் அணுசக்தி என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அணுசக்தி கண்காட்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்ற நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு தூத்துக்குடி கனநீர் ஆலையின் பொதுமேலாளர் எஸ். சாஹா தலைமை வகித்தார்.

மும்பை இந்திய கனநீர் வாரியத்தின் இயக்குநர் பி.ஆர். மொஹந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: சமுதாய வளர்ச்சியில் அணுசக்தி துறை மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. அணுசக்தி அழிவை ஏற்படுத்தியதை விட, ஆக்கப்பூர்வ சக்தியாக ஏராளமான பலன்களை அளித்து வருகிறது.

வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், மருத்துவத் துறையில் நோய் கண்டறியல், நோய் சிகிச்சை போன்றவற்றில் அணுசக்தியின் பங்களிப்பு மகத்தானவை.

கன நீர் ஆலை

அணுசக்தி துறையின் முக்கிய அங்கமாக கனநீர் வாரியம் செயல்பட்டு வருகிறது. அணு உலைகளை குளிர்விக்க பயன்படும் கனநீர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கனநீர் ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது.

தூத்துக்குடி கனநீர் ஆலை கனநீர் தயாரிப்பில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனின் அணு எடையை 16-ல் இருந்து 18 ஆக அதிகரித்து 018 என்ற ஐசோடோப் தயாரிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் முதல் முறையாக தூத்துக்குடி கனநீர் ஆலையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஐசோடோப்

புற்றுநோய், மூளைக் கட்டி போன்ற நோய்களை கண்டறிவதில் இந்த 018 ஐசோடோப் முக்கிய பங்காற்றி வருகிறது. தூத்துக்குடி கனநீர் ஆலையில் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தை கொண்டு 018 ஐசோடோப் வணிக ரீதியாக தயாரிக்கும் ஆலை ஆந்திர மாநிலம் மணுகுருவில் உள்ள கனநீர் ஆலையில் அமைக்கப்பட்டு வருகிறது’ என்றார் அவர்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைவர் டி. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கனநீர் ஆலை துணை பொதுமேலாளர் ஆர். வீரராகவன் வரவேற்றார். துணை மேலாளர் கே. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

கண்காட்சி

இந்த கண்காட்சியில் அணு சக்தி துறையின் பல்வேறு செயல்பாடுகளை விளக்கும் புகைப்படங்கள், மாதிரிகள் இடம் பெற்றிருந்தன. மேலும், அணு விபத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச் சரிக்கை கருவிகள், அணுசக்தி கனிமங்களான இலுமினைட், கார்ன்ட், ரூடைல், சிர்கோனியம், மோனோசைட், அணுகதிர் வீச்சை கண்டறியும் கருவிகள் போன்றவை இடம் பெற்றிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x