Published : 08 Jul 2015 08:37 AM
Last Updated : 08 Jul 2015 08:37 AM

காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை மீட்டவர்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பாராட்டு

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று மாநில வீட்டுவசதி - நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

காவிரி டெல்டா விவசாயி களுக்கு குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.40.97 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாய சங்கங்களின் சார்பில் திருவாரூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:

மேட்டூர் அணையை கட்டி 80 ஆண்டுகள் ஆன நிலையில், குறுவைக்கு ஜூன் 12-ம் தேதிக்கு முன்பு ஜூன் 6-ம் தேதியே பாசனத்துக்கு முதல்முறையாக அணையை திறந்த பெருமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ளது.

காவிரியில் தமிழக உரிமையை தாரை வார்த்தவர் கருணாநிதி. அவரது சொந்த விருப்பங் களுக்காக காவிரி உரிமையைக் காக்க தவறியவர். அதன் பின்னர் முதல்வரான ஜெயலலிதா, சட்டப் போராட்டங்கள் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழிலும் வெளியிடச் செய்து, தமிழக உரிமையை மீட்டுக் கொடுத்துள்ளார்.

விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த தொலைநோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் ஜெயலலிதா என்றார்.

விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியபோது, “காவிரியில் தமிழக மக்களின் உரிமையை மீட்டுக் கொடுத்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்து வருபவர் ஜெயலலிதா” என்றார்.

அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசும்போது, “நவீன இயந்திரங்கள் மூலம் விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்து, உணவு உற்பத்தியை பெருக்க வழிவகுத்துள்ளார் ஜெயலலிதா” என்றார்.

விழாவுக்கு தலைமை வகித்த காவிரிப் பாசன விவசாயிகள் நலச் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் பேசியபோது, “ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று சபதம் எடுத்து, அதை நிறைவேற்றி விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்து உதவி செய்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.

நடப்பாண்டு 1.50 லட்சம் ஏக்கர் கோடை நெல் சாகுபடி நடந்துள்ளது. குறுவை இருக்காது என்ற நிலை இருந்தபோது, மழை பொய்த்தாலும் குறுவை உண்டு என்று தொகுப்புத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் ஜெயலலிதா” என்றார்.

விழாவில், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமப் பொதுச் செயலாளர் வெ.சத்தியநாராயணன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கிருஷ்ணமணி, செயலாளர் எம்.ராஜேந்திரன், ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சாவி.ராமகிருஷ்ணன், காவிரி டெல்டா விவசாயிகள் குழும மாவட்டத் தலைவர் கே.குஞ்சிதபாதம், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மன்றத் தலைவர் எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x