Published : 27 May 2014 09:20 AM
Last Updated : 27 May 2014 09:20 AM

தமிழக அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு: கே.பி.முனுசாமி இடத்தில் எடப்பாடி பழனிசாமி

தமிழக அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கே.பி.முனுசாமியின் இடத்தை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிடித்துள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பல படிகள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். தமிழக அமைச்சரவையை கடந்த வாரத்தில் முதல்வர் ஜெயலலிதா மாற்றியமைத்தார். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, தொழிலாளர் துறை அமைச்சர் பச்சைமால், வேளாண் துறை அமைச்சர் தாமோதரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமி, கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், தமிழகத்தின் அமைச்சரவையின் சீனியாரிட்டி பட்டியல் தற்போது தயாராகியுள்ளது. 32 பேர் கொண்ட அமைச்சரவையில், முதல்வருக்கு அடுத்தபடியாக வழக்கம்போல், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.பி.முனுசாமியின் இடத்தை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பிடித்துள்ளார். இதுபோல், 24-வது இடத்தில் இருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பல இடங்கள் முன்னேறி 12-வது இடத்துக்கும், பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி 13-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். இதன்மூலம், சட்டமன்றத்தில் 14 பேர் கொண்ட அமைச்சர்களின் முதல்வரிசைக்கு, இரண்டாம் வரிசையில் இருந்து இவர்கள் இருவரும் முன்னேறியுள்ளனர்.

மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி 15-வது இடத்திலும், கோகுலஇந்திரா 18-வது இடத்திலும் உள்ளனர். கடைசி இடத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x