Published : 11 Jun 2015 11:49 AM
Last Updated : 11 Jun 2015 11:49 AM

கோவையில் ஆதரவின்றி தவித்த பார்வையற்ற கர்நாடக சிறுமி மீட்பு: உறவினர்களிடம் ஒப்படைத்தது ஈரநெஞ்சம் அமைப்பு

கோவை ரயில் நிலையத்தில் ஆதரவின்றி தவித்த, கர்நாடகத்தைச் சேர்ந்த பார்வையற்ற சிறுமி மீட்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 30-ம் தேதி, கோவை ரயில் நிலையத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி அழுதபடி தனியாக நின்று கொண்டிருந்ததை ரயில்வே காவலர்கள் கவனித்து மீட்டனர். அவரை விசாரித்ததில் கர்நாடக மாநிலம், யாத்கிர் என்ற கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்பதும், அங்கிருந்து வழி தவறி ரயில் மூலமாக கோவைக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கோவை மாநகராட்சி காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந் நிலையில், அந்த சிறுமியின் உறவினர்களைக் கண்டறிந்து அவரை ஒப்படைக்கும் பணியில் ஈரநெஞ்சம் அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் பயனாக, லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் அவரது உறவினர்கள் தொடர்பு கிடைத் தது. அவர்களிடம் லட்சுமி குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு படிப்பறி வும், போதிய வருமானமும் இல்லாததால் அவர்களால் கோவைக்கு வர முடியவில்லை. தொடர்புகொண்டு பேசுவதற்கான மொழிப் பிரச்சினையும் இருந்தது.

இது தொடர்பாக ஈரநெஞ்சம் அமைப்பினர், பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் ராஜா குரூப்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் உதவியைப் பெற்று அவர்கள் மூலமாக லட்சுமியின் உறவினர்களை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் நேரடியாக யாத்கிர் ஊருக்குச் சென்று லட்சுமியின் தந்தை மஞ்சுநாத், மாமா நாகப்பா ஆகியோரை நேற்றுமுன்தினம் கோவைக்கு அழைத்து வந்தார்.

காப்பகத்தில் இருந்த லட்சுமியை சந்தித்த அவர்கள், அவரை கட்டித் தழுவி மகிழ்ந்தனர். சிறுமியை மீட்டு தங்களிடம் ஒப்படைத்த ஈரநெஞ்சம் அமைப்பினருக்கும், தனியார் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதையடுத்து, லட்சுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் கட்ட கண் பரிசோதனையை முடித்து அன்று நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர்களுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x