Published : 04 Jun 2015 01:00 PM
Last Updated : 04 Jun 2015 01:00 PM

ஜெ. வழக்கு தீர்ப்பு: வாட்ஸ்-அப் முயல் கதை சொல்லி விமர்சித்த ஸ்டாலின்

சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, வாட்ஸ்-அப் முயல் கதை ஒன்றைச் சொல்லி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் விவரம்:

"தலைவர் கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். இப்போது இருக்க கூடிய முதலமைச்சரும் ஐந்து முறை முதலமைச்சராக வந்திருக்கிறார். ஆனால் கருணாநிதி எப்படி 5 முறை முதல்வராக வந்தார். ஜெயலலிதா எப்படி 5 முறை முதல்வரானார் என்கிற இந்த வித்தியாசத்தை உங்களிடத்தில் நான் அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நேரடியாக முழுமையாக தன்னுடைய ஆட்சியை 5 முறை நடத்தி அதில் சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு இருக்க கூடியவர் அப்படியா? முதலமைச்சர் பதவியை ஏற்பது, பதவி பறிக்க கூடிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு பதவியில் இருந்து விலகுவது அதற்கு எப்படியோ தீர்ப்பை நீதியை எந்த வகையிலோ அதை வளைத்து அல்லது வாங்கி, அதற்கு பிறகு மீண்டும் அந்தப் பொறுப்பில் வரக்கூடிய நிலையில் தான் அவர் ஐந்து முறை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

ஆனால் நம்முடைய தலைவரைப் போல ஒரு வரலாற்றை யாராலும் படைத்துவிட முடியாது. அடைவதற்கு யாரும் பிறக்கவும் முடியாது. வி.வி.கிரி, கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம், பிரதீப பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகிய இந்த 5 பேரும் ஜனாதிபதியாக வரக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தித் தந்திருக்கூடிய சூழ்நிலை உருவாக்கி தந்தவர் நம் தலைவர். இந்திரா காந்தி, வி.பி. சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், இவர்களெல்லாம் பிரதமர் பதவியை ஏற்கக்கூடிய நிலையை ஏற்படுத்தி தந்து அவர்களை அழகுப் பார்த்தவர் தலைவர் கருணாநிதி.

தமிழகத்திலே தலைவர் கலைஞர் 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார் என்றால், நாட்டில் இருக்ககூடிய மக்களுக்கு ஏழை, எளியோருக்கு தொழிலாள தோழர்களுக்கு பாட்டாளி மக்களுக்கு, விவசாய பெருங்குடி மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின சமுதாய மக்களுக்கு ஒட்டு மொத்த தமிழ் இன மக்களுக்கு அவர் ஆற்றியிருக்க கூடிய திட்டங்களை போல், சாதனைகளை போல் இதுவரை தமிழ்நாட்டிலே அல்ல... இந்தியாவில் இருக்ககூடிய எந்த முதலமைச்சரும் நிறைவேற்ற முடியாத அளவிற்கு அவ்வளவு திட்டங்களை இந்த தமிழகத்திற்காக நிறைவேற்றித் தந்தவர் நம்முடைய தலைவர்.

நான் இவற்றை எல்லாம் வரிசைப் படுத்தி பட்டியலிட்டு சொல்வதற்கு என்ன காரணமென்றால், இப்போது நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய அ.தி.மு.க. ஆட்சி இவைப் போன்ற ஒரு திட்டத்தையாவது, சொல்ல கூடிய தெம்பு, திராணி, தகுதி, இந்த ஆட்சிக்கு உண்டா சிந்தித்துப் பாருங்கள்.

இன்றைக்கு நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. கணக்கு நடக்கிறது. கணக்கு என்றால் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு விதமான கணக்காக அதுப் போய் கொண்டிருக்கிறது. கணக்கு என்பது எல்லோருக்கும் சமம். எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் கணக்கு சமமாக தான் இருக்கும், இந்த மாநிலத்திற்கு ஒரு கணக்கு, இந்த நபருக்கு ஒரு கணக்கு என கணக்கு வித்தியாசமாக இருக்காது. ஆறையும், நான்கையும் கூட்டினால் பத்து தான். ஒன்றாம் வகுப்பு பிள்ளையை கூப்பிட்டுக் கேட்டால் கூட சொல்லும் சரியாக. ஆனால் சமீபத்தில் தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால், ஆறையும், நான்கையும் கூட்டினால் 24 என்று சொன்னால் ஆச்சரியப்படுவோமா, வியப்படுவோமா சிந்தித்துப் பார்க்க வேண்டாம்.

வாட்ஸ் அப் முயல் கதை

இந்த கணக்கு எப்படி இருக்கிறது என்றால், துரைமுருகன் சொன்னாரே இன்று விஞ்ஞான முறையில் வாட்சாப், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றைப் பார்க்கிறோம் எல்லாவற்றையும் இப்போது கைகளிலே பார்க்கிறோம். நான் கூட திருவள்ளூர் மாவட்ட கூட்டத்திலே சுட்டிக் காட்டினேன். வாட்சாப்பிலே ஒரு நகைச்சுவையான கதை, என்ன கதை என்றால் முயல் கதை, ஒரு ஜமீன்தார் திடீரென்று அவருக்கு ஒரு ஆசை வந்திருக்கிறது. தோட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய முயல்களில் ஒரு முயலைப் பிடித்து, அதை அடித்து சமைத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்திருக்கிறது.

உடனே தன்னுடைய வீட்டு சமையல் காரியை கூப்பிட்டு, ஒரு முயலை பிடித்து சமைத்துக் கொடு என்று சொல்கிறார். அந்த சமையல் காரியும் கஷ்டப்பட்டு அடித்து சமைத்து பரிமாறியிருக்கிறாள். அவள் சமைக்கிற போது அதை ருசிப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறாள். உடனே அதனுடைய நான்கு கால்களில் ஒரு காலை எடுத்து அந்த சமையல் காரி சாப்பிட்டுவிட்டாள். மிச்சம் இருப்பது மூன்று கால்கள். அந்த மூன்று காலுடன் சமைத்த கறியை கொண்டு போய் தன்னுடைய ஜமீன்தாருக்கு பரிமாறியிருக்கிறாள்.

பரிமாறுகிற போது அந்த முதலாளிக் கேட்டார். என்னம்மா மூன்று கால் தான் இருக்கிறது மிச்சம் ஒரு கால் எங்கே. உடனே அவள் சொன்னாள் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் தான் என்று. இது என்ன நியாயம் நீ சொல்வது தவறாக இருக்கிறது என்று பக்கத்தில் இருக்ககூடிய பெரியவரிடத்திலே இடத்திலே பஞ்சாயத்துக்கு போயிருக்கிறார்கள். அவர் சொல்லியிருக்கிறார், இல்லை இல்லை முயலுக்கு நான்கு கால்கள் தான் என்று. அதன் பிறகு அந்த சமையல்காரிக்கு திருடி என்ற பட்டத்தையும் கொடுத்து தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு அந்த பெண் சும்மா இருக்கவில்லை அந்த ஊரில் இருக்ககூடிய பெரிய நாட்டாமையை சாமி என்று பெயர் அவரைப் பிடித்து பஞ்சாயத்துக்கு போய் இருக்கிறாள். அந்த நாட்டாமை பஞ்சாயத்து பண்ணி விட்டு கடைசியாக முயலுக்கு மூன்று கால் தான் என்று சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் உண்மை வெளிவருகிறது. அதாவது முயலுக்கு மூன்று கால் இல்லை நான்கு கால் தான் என்று. அதற்கு பிறகு இந்த தீர்ப்பை எப்படி தந்திருக்கிறீர்கள் என்று விளக்கம் கேட்டால் ஒரு கணக்கு வருகிறது. முயலுக்கு முன்னாடி இரண்டு கால் பின்பக்கத்தில் இரண்டு கால் ஆக மூணுகால் தான். இது தான் கணக்கு.

ஆக இந்த கணக்கு தான் நாட்டிலே மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. அரசியலையும் அசிங்கியமாக்கிக் கொண்டிருக்கிறது. நீதியை வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை வந்துள்ளது.

எனது பொறுப்புகள்...

இதோ உங்களிடத்திலே உரையாற்றிக் கொண்டிருக்கிற இந்த எளியோனுக்கு இந்த இயக்கத்திலே எத்தனையோ பொறுப்புகள். கிளை கழகத்திலிருந்து நான் என்னுடைய பணியை தொடங்கியிருந்தாலும், கிளைக்கழகத்தின் பகுதி பிரதிநிதியாக, மாவட்ட பிரதிநிதியாக பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, அதற்கு பிறகு இளைஞரணி செயலாளராக பின்னர் இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர்களில் ஒருவராக, இயக்கத்தின் பொருளாளராக இப்படி இயக்கத்தின் பல பொறுப்புகள், அதே போல் ஆட்சிப் பொறுப்பிலே மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அந்த நிலையிலே மக்கள் பிரதிநிதியாக இருந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினராக இதே சென்னை மாநகரத்தின் வணக்கத்திற்குரிய மேயராக உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வர் என்ற பொறுப்பிலேயும் அமர வைத்தவர் தலைவர்.

என்னை பணிகளை இப்படி எல்லாம் பணி ஆற்ற வேண்டுமென்று கற்றுத் தந்திருக்கிறார். அது மட்டுமல்ல ஒரு முறை பத்திரிகை நிருபர்கள் தலைவரைச் சந்தித்து பேட்டி எடுக்கின்ற போது, ஸ்டாலினைப் பற்றி ஒரே வரியில் சொல்லுங்கள் என்று கேட்ட கேள்விக்கு, தலைவர் ஒரே வரியில் சொன்னார். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று. சொல்லி அன்றைக்கும் என்னை வாழ்த்தியிருக்கிறார். அதையெல்லாம் நான் மிக மிக பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் விட இங்கு நான் பெருமையாக குறிப்பிட விரும்புவது, அவர் மடியில் தவழ்ந்த குழந்தை பருவம் தான் என்னுடை வாழ்நாளில் மறக்க முடியாத பருவமாக நான் எண்ணுவது அது தான் என்னுடைய வாழ்வின் வசந்தமாக என்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஊழல் ஆட்சி

தலைவர் கருணாநிதி தங்களுடைய பிறந்த நாள் செய்தியில் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். தமிழகத்திலே ஒரு அராஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த அக்கிரம ஆட்சிக்கு வியூகம் அமைக்க நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரையாக ஆலோசனையாக கட்டளை பிறப்பித்திருக்கிறார்.

எனவே அந்த உறுதிமொழியை ஏற்று இன்று தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற ஊழல் ஆட்சிக்கு அதுவும் முட்டை வாங்குவதில் ஒரு ஆண்டுக்கு 97 கோடி ஊழல், பருப்பு வாங்குவதிலே 110 கோடி ரூபாய் ஊழல், லேப்டாப் வாங்குவதிலேயே ஊழலோ ஊழல், கிரானைட்டிலே 16 ஆயிரம் கோடி ஊழல், தாது மணல் கொள்ளையிலே 1 லட்சம் கோடி ஊழல், மின் வாரியத்திலே 80 ஆயிரம் கோடி நஷ்டம் இவற்றை எல்லாம் விட வெட்கக்கேடு என்னவென்றால், அரசு இன்றைக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கடனிலே தத்தளித்து கொண்டிருக்கிறது. இப்படி தத்தளிக்கிற நிலையில் உள்ள தமிழகத்தை காப்பாற்ற தயாராவோம், புறப்படுவோம், தலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று வீறு நடைபோடுவோம்" என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x