Published : 22 Jun 2015 07:36 AM
Last Updated : 22 Jun 2015 07:36 AM

இல்லம்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும்: ஆளுநர் ரோசய்யா அறிவுரை

ஒவ்வொரு வீட்டிலும் தினம் தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கூறியுள்ளார்.

வேதாத்ரி மகரிஷி நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் சார்பில், உலக யோகா தினம் சென்னையில் நேற்று கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரம் பேர் கலந்துகொண்டு உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்களை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ‘அகம், புறம், ஆனந்தம்’ எனும் குறுந்தகட்டை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையர் மோகன் பியாரே வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:

நமது குடிமக்களை சிறந்த மனிதர்களாக மேம்படுத்தவும், மன அமைதி பெறவும் யோகா பயிற்சி அவசியம். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா வில் தோன்றிய யோகா கலை இன்று உலகம் முழுவதும் பரவி யுள்ளது. ஒவ்வொரு குடும்பத் தினரும் கூட்டாக இணைந்து தினந்தோறும் பிரார்த்தனை செய்வது போல யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உலக யோகா தினத்தில் இந்தியாவில் குறிப்பாக இளைஞர்களிடம் யோகா பற்றி பெருமளவு விழிப் புணர்வு ஏற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

இவ்வாறு ஆளுநர் ரோசய்யா பேசினார்.

பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் எச்.தேவராஜன் பேசும்போது, ‘‘யோகாவை பாடத்திட்டமாக கொண்டு வருவது குறித்து ஆராய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யோகா ஒரு பாடமாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தண்டவன், தமிழ்நாடு உடற் கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.எம்.மூர்த்தி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x