Published : 01 Jun 2015 04:02 PM
Last Updated : 01 Jun 2015 04:02 PM

அரியவகை மரத்தின் பெயரை மாற்றிய வனத்துறை: சிறுமலைக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள் அதிர்ச்சி

சிறுமலையில் அழியும் தருவாயில் உள்ள மரத்தின் மீது, மற்றொரு மரத்தின் பெயரை மாற்றி எழுதி வனத்துறையினர் பெயர் பலகை அடித்ததை பார்த்து சுற்றுலா சென்ற கல்லூரி, பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தப்படி யாக உள்ள கோடைவாசஸ்தலம் சிறுமலை. இங்கு, மூலிகைச் செடிகள், அரியவகை மரங்கள், தாவரங்கள், வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. ஆண்டு முழுவதும் குளிர்ந்த காலநிலை கொண்ட சிறுமலையின் எழில் கொஞ்சும் இயற்கை அழகையும், மூலிகைத் செடிகள், மரங்களை பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இங்கு வந்து செல்கின்றனர்.

சிறுமலை வனப்பகுதியில், அழியும், அழிந்த தாவரங்கள், மரங்களை சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ள அந்த மரங்கள் மீது வனத்துறையினர், அவற்றின் பெயர்களை பலகையில் எழுதி மரத்தில் ஆணி அடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமலையில் புதூர் செல்லும் சாலையில் அழியும் தருவாயில் உள்ள அரியவகை மரங்கள் மீது, தவறான பெயர்களை பலகையில் எழுதி ஆணி அடித்து வைத்துள்ளனர். கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள், மரங்கள் மீது தவறான பெயர் எழுதி வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் சிலர் கூறியதாவது:

சிறுமலையில் அழியும் தருவா யில் உள்ள மரங்கள், செடிகள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. வனப் பகுதியில் ஓடும் காட்டாறு களில் மழையில் வந்து படித்த மண்ணை மாட்டு வண்டி, லாரிகளில் திருடிச் செல்கின்றனர். இவற்றை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

செர்குலியா கட்டேட்டா (தோண்டி கவலம்) என்ற மரத்தின் மீது, ஏலியேஸ் கார்ப்பஸ் டியூபர் குலட்டஸ் (தானிக்காய்) என தவறாக எழுதியுள்ளனர்.

ஏலியேஸ் கார்ப்பஸ் டியூபர் குலட்டஸின் தமிழ் பெயர் ருத் ராட்ச மரம். அதையும் தவறாக எழுதியுள்ளனர். இந்த தோண்டி கவலம் மரத்தில் இருந்து விழும் விதைகளை வறுத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் உண்டாகும். மேலும் சிறுமலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காட்டேஜ்களுக்காக மரங்களை அழித்து புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, விசாரிப்பதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x