Published : 28 Jun 2015 11:24 AM
Last Updated : 28 Jun 2015 11:24 AM
ஜாதிக் கொடுமைகளைக் களையவும், ஜாதிய வன்முறைகளைத் தடுக்கவும் தமிழக கல்வித்துறையும் காவல்துறையும் இணைந்து தமிழகம் முழுவதும் பயிற்சிபெற்ற கலைக் குழுக்கள் மூலம் வீதி நாடகங்களை நடத்திவருகின்றன.
சமூகத்தின் பல்வேறு கட்டங்களிலும் ஜாதியக் கொடுமைகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. ஜாதியை மையமாக வைத்தே ஏராளமான குற்றங்கள் நடைபெறுகின்றன. ஜாதியக் கொடுமைகளும், தீண்டாமைகளும் இன்றும் தொடர்வது மறுக்க முடியாதது.
ஜாதிய வேறுபாடுகள் பள்ளி மாணவர்களையும் விட்டுவைப்பதில்லை. எனவே, பெரியவர்களுக்கு மட்டுமின்றி பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இக் கொடுமைகளை எடுத்துக்கூறி ஜாதிகள் அற்ற சமுதாயத்தை படைக்கும் வகையிலான வீதி நாடகங்கள் மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை பள்ளிக் கல்வித் துறையும், காவல்துறையும் இணைந்து தமிழகம் முழுவதும் கலைக்குழுக்கள் மூலம் நடத்தி வருகின்றன.
இதுபோன்ற விழிப்புணர்வு வீதி நாடகங்கள், பாடல் நிகழ்ச்சிகளை நடத்த தமிழகத்தில் 12 கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு சமீபத்தில் அவர்களுக்கு பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் பயிற்சியளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது 3 அல்லது 4 மாவட்டங்களுக்கு ஒரு கலைக்குழு வீதம் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறையால் தேர்வு செய்யப்படும் இடங்களிலும் குறிப்பிட்ட சில பள்ளிகளிலும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு ஒரு மாவட்டத்தில் சுமார் 20 இடங்கள் வரை விழிப்புணர்வு வீதி நாடகங்களும், பாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அந்தந்த கலைக்குழுக்களுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொடக்கமாக ஜாதிகள் வேண்டாம் என்ற பாடலைப் பாடியபடி கலைக்குழுவினர் ஊர்வலம் செல்லுதல், ஜாதிக் கொடுமைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஊர் பொது இடத்தில் வீதி நாடகம் அமைத்தல், அதில், ஜாதிகளைக் களைந்து ஒற்றுமையாக இருந்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து எளிதாகப் புரியும் வகையில் நடித்துக் காட்டுதல் மற்றும் ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி பாடல்கள் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த கோடாங்கி கலைக்குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சுப்பையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து, ஜூன் 29-ம் தேதி சாத்தூர், படந்தால் பகுதிகளிலும், 30 மற்றும் ஜூலை 1-ம் தேதிகளில் சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளிலும், 2 மற்றும் 3-ம் தேதிகளில் திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டியிலும், 6, 7-ம் தேதிகளில் வத்திராயிருப்பு பகுதிகளிலும் 8-ம் தேதி ராஜபாளையத்திலும் மாலை நேரங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இதேபோல் இதர குழுக்கள் மூலம் மாநிலத்தின் இதர பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT