Published : 11 Jun 2015 03:12 PM
Last Updated : 11 Jun 2015 03:12 PM

பார்வையற்ற மாணவிகளின் கல்வி வாய்ப்பை உறுதி செய்க: ராமதாஸ்

தஞ்சாவூர் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியை இருபாலருக்குமான பள்ளியாக மாற்றவும், அதில் விண்ணப்பிக்கும் மாணவிகள் அனைவருக்கும் இடம் ஒதுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தஞ்சாவூரில் உள்ள அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பில் சேருவதற்காக சென்ற 7 மாணவிகளை சேர்க்க மறுத்து பள்ளி நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. இதனால், அந்த மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசாணை தயாரிப்பதில் அதிகாரிகள் மட்டத்தில் நிகழ்ந்த குளறுபடிகள் தான் இந்த பிரச்சினைக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.

பார்வையற்ற ஆண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி சென்னை பூந்தமல்லியிலும், பார்வையற்ற பெண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி திருச்சியிலும் செயல்பட்டு வருகின்றன. பார்வையற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உயர்நிலைப்பள்ளிகள் தஞ்சாவூர் உள்ளிட்ட பல நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கான மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. இதனால் பார்வையற்ற மாணவர்கள் சென்னைக்கும், மாணவிகள் திருச்சிக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தஞ்சாவூரில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பல ஆண்டுகளாக போராடி வந்தன.

அந்த அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தஞ்சாவூரில் உள்ள அரசு பார்வையற்றோர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதாக கடந்த 15.07.2014 அன்று சட்டப்பேரவையில் சமூக நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அத்துறையின் அமைச்சர் பா. வளர்மதி அறிவித்தார். அதன்படி அந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு பள்ளி தரம் உயர்த்தப்பட்டு வகுப்புகளும் தொடங்கின.

2014-15 ஆம் கல்வியாண்டில் தஞ்சாவூர் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் 13 ஆண் மாணவர்கள் மட்டுமே சேர்ந்த நிலையில், மாணவிகள் எவரும் சேரவில்லை. இதனால் எந்த சிக்கலும் எழவில்லை. 2014-15 ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியில் சேர 7 மாணவிகள் விண்ணப்பித்த போது தான் அது ஆண் மாணவர்களுக்கான பள்ளி என்றும், அங்கு மாணவிகளைச் சேர்க்கக் கூடாது என்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இருபால் மாணவர்களும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தஞ்சாவூர் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இருபாலருக்குமான உயர்நிலைப்பள்ளியை ஒரு பாலருக்கான மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியிருப்பது சரியல்ல. இது மாணவிகளின் கல்வி வாய்ப்பை பறித்து விடும். அதேநேரத்தில் இது திட்டமிட்டு நடந்ததாகவும் தெரியவில்லை.

இதுகுறித்த அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்ட அமைச்சர் பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி என்று பொதுவாகத் தான் கூறியுள்ளார். அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கருத்துருவிலும் இருபாலருக்குமான மேல்நிலைப்பள்ளி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அரசாணை வெளியிடப்படும் போது அதில் தஞ்சாவூர் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி (ஆண்கள்) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசாணை தயாரித்தவர்கள் செய்த தவறுக்காக பார்வையற்ற மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது. தஞ்சாவூர் பள்ளியில் சேர விண்ணப்பித்துள்ள 7 மாணவிகளும் 400-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இருண்ட தங்களின் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்வதற்காகத் தான் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிக்க விரும்புகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு பார்வையற்றோர் பள்ளி தொடர்பான அரசாணையில் உரிய திருத்தம் செய்து தஞ்சாவூர் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியை இருபாலருக்குமான பள்ளியாக மாற்றவும், அதில் விண்ணப்பிக்கும் மாணவிகள் அனைவருக்கும் இடம் ஒதுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x