Published : 26 Jun 2015 08:23 AM
Last Updated : 26 Jun 2015 08:23 AM

ஆர்.கே.நகரில் அனல் பறந்த இறுதிக்கட்ட பிரச்சாரம்: அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி யில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தொகுதியில், பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இறுதிநாளில் தொகுதி முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்தது.

அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

சாஸ்திரி நகர், வினோபா நகர் பகுதி களில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் உள்ளிட்டோர் சென்றனர். வ.உ.சி. நகரில் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கொருக் குப்பேட்டையில் அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன், சிங்காரவேலன் நகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பழ.கருப் பையா எம்எல்ஏ, இந்திரா நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். 28 அமைச்சர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடி பகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

ஆர்.கே.நகரில் 230 வாக்குச்சாவடிகள் உள்ளன. 3 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு அலுவலகம் அமைத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். இந்த அலுவலகங் களில் வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோ சனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர். தண்டை யார்பேட்டை நேதாஜி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மகேந்திரன் பிரச்சாரம்

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன், கொருக்குப்பேட்டை ரயில் நிலையப் பகுதியில் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார். கொருக்குப்பேட்டை, எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொண்டர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘வேட்புமனு தாக்கல் செய்த ஜூன் 9 முதல் தொகுதி முழுவதும் சென்று மக்களை சந்தித்தேன். ஜனநாயகத்தை காக்க நடக்கும் இந்தப் போராட்டம் வித்தியாசமான அனுபவத்தை எனக்குத் தந்துள்ளது. எதையும் எதிர்த்து போராடும் உத்வேகத்தை தந்துள்ளது. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் உண்மையை உணர்ந்து கொண்டு எனக்கு வாக்களிப்பார்கள்’’ என்றார்.

டிராஃபிக் ராமசாமி பிரசாரம்

சுயேச்சையாக போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகர், ராயபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் காந்தியவாதி சசிபெருமாள் உள்ளிட்டோரும் சென்றனர்.

இவர்கள் தவிர ஆர்.கே.நகரில் போட்டியிடும் தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் போட்டியிடும் பொன்.குமாரசாமி உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் நேற்று இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x