Published : 10 Jun 2015 10:35 AM
Last Updated : 10 Jun 2015 10:35 AM
தமிழ்நாடு மாநிலப் பறவையான மரகதப் புறாக்கள் கடந்த 10 ஆண்டு களில் 30 சதவீதம் அழிந்து விட்டதாக பன்னாட்டு அமைப்பின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியக் காடுகளில் தமிழக வனப்பகுதியானது அனைத்து வகை காடுகள், உயிரினங்களைக் கொண்டது. தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை, பழநி மலை, அகஸ்தியர் மலை ஆகிய வனப்பகுதிகள் அடர்ந்த காடுகளைக் கொண்ட பல்லுயிர் பரவல் செறிந்த வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல்லுயிர் பெருக்கத்தில் பறவைகள் தொகுதி மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்தியாவில் தற்போது 4,500 பறவை இனங்கள் உள்ளதாக பறவை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரையில் 508 பறவை இனங்கள் உள்ளதாகக் கண்ட றியப்பட்டுள்ளது. இந்த பறவை இனங்களில் புறாக்கள் தனிச் சிறப்புமிக்கவை.
இந்த புறா குடும்பங்களில் 289 சிற்றினங்கள் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர். மேற்கு ஆசியாவில் 50 வகை களும், இந்தியாவைப் பொருத்த மட்டில் 30 வகைகளும் உள்ளதா கவும் அறியப்படுகிறது. இதில் மாடப்புறா, காட்டுப்புறா, நீலகிரி காட்டுப்புறா, தவிட்டுப்புறா, சின்ன தவிட்டுப்புறா, சாம்பல் நெற்றி புறா, பச்சைப்புறா, பெரிய பச்சைப்புறா, மந்திப்புறா மற்றும் மரகதப்புறா உள்ளிட்ட 12 வகை புறாக்கள் தமிழகத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதில் மரகதப்புறா அரியவகை புறா இனமாகும். இவை வெப்ப மண்டலம், மித வெப்ப மண்டலப் பகுதிகளில் மட்டுமே வாழக்கூடிய தகவமைப்பைப் பெற்றவை. தமிழகத்தில் அழகிய மற்றும் அரிய வகை பறவை இனங்கள் எத்த னையோ இருந்தபோதும், மரகதப் புறாவின் சிறப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த புறாவை மாநிலப் பறவையாக அங்கீ கரித்துள்ளது. இப்பறவையை பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அழிந்துவரும் இனமாக அறிவித்துள்ளது.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு, அதன் சமீபத்திய கணக்கெடுப்பில் கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் மரகதப்புறாக்கள் அழிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக கூறுகிறார் வன ஆர்வலரும், காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியருமான ஆர்.ராமசுப்பு.
இது குறித்து அவர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: ‘‘மரகதப் புறாக்கள், 25 செ.மீ. முதல் 28 செ.மீ. உயரம். கண்களை வசப்படுத்தக் கூடிய அடர்பச்சை நிறத்தை உடைய இறக்கைகளையும், செந்நிற கழுத்துப் பட்டையுடன், அடர் சாம்பல் நிறமுடைய உடலைப் பெற்றவை. இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இந்த புறாக்கள் மியான்மர், தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோ னேசியா, பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
இவை பொதுவாக மலைக் காடுகள், பசுமைமாறா காடுகள் அடர்வனங்கள், தோட்டப்பகுதிகள் மற்றும் பூங்காக்களில் கூடுகட்டி வாழும் தன்மை உடையவை. மழைக்காடுகளில் வாழும் ஒரே பறவை இவைதான். கால்கோ பாப்ஸ் இண்டியா என்ற அறிவியல் பெயர்கொண்ட இந்த பறவை இனத்தில் 3 வகைகள் உள்ளன. இவை தனித்தோ, சிறு குழுக்களாகவோ, ஜோடிகளாகவோ காணப்படும். இவை காடுகளில் தரைப்பகுதியில் காணப்படும் விதைகள், பழங்கள் மற்றும் கரையான்களைத் தேடி பெரும்பான்மையான நேரத்தை செலவிடும். குறைந்த நேரமே மரங்களில் காணப்படும் இந்த புறாக்கள் மற்ற புறாக்களைக் காட்டிலும் பறக்கும் திறன் குறைவு.
அதனால் இந்த புறாக்கள் நடப்பதையே விரும்பும். மழைக் காடுகளில் 3 மீ. முதல் 5 மீ. உயரமுள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி வாழும் இயல்புடை யவை. மற்ற புறாக்களைப்போல் இல்லாமல் குறைந்த காலம் மட்டுமே இவை இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவை வெளிர் சிவப்பு நிறமுள்ள 2 முட்டைகளை இட்டு அடைகாக்கும். ஆனால் ஒரு குஞ்சு மட்டுமே பிழைத்து உயிர் வாழும். பறவைகளுக்கான இடம்பெயர்வு குணாதிசயம் இந்த புறாக்களுக்கு கிடையாது.
இவை ஆந்தை, வல்லூறு, கழுகு, காட்டுப்பூனை மற்றும் சிறிய வகை வேட்டை விலங்குகளால் பாதிப்புக்குள்ளாகின்றன. மரங் களை வெட்டுதல், காடுகளை அழித் தல், வேட்டையாடுதல் போன்ற வற்றால் இவை அழிகின்றன. வெளிநாடுகளில் கூடுகளில் அடைக் கப்பட்டு அழகுக்காக வளர்க்கப் படுகின்றன. நமது மாநிலப் பறவை யான புறாக்களைப் பாதுகாப்பது அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுடைய கடமையும் ஆகும்’’ என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT