Last Updated : 15 Jun, 2015 03:51 PM

 

Published : 15 Jun 2015 03:51 PM
Last Updated : 15 Jun 2015 03:51 PM

இந்து ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை?- பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இந்து அமைப்புகள் கேள்வி

இந்து ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விஷயத்தில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வாக்குறுதி என்னாச்சு? என கேட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க கேட்டு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்பு ஜூலை போராட்டம் நடந்தது. மக்களவைத் தேர்தலின்போது இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக பொன். ராதாகிருஷ்ணன் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், தற்போதுவரை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இக்கோரிக்கையை வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்பு சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது.

இப்பிரச்சினையில் இதுவரை மவுனமாக இருந்த இந்து அமைப்புகள் தற்போது சுவரொட்டிகளை ஒட்டி பொன். ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்தாமரைக்குளம், சுவாமி தோப்பு, கொட்டாரம், சுசீந்திரம், அகஸ்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

அய்யா வைகுண்டர் மற்றும் முத்தாரம்மன் படங்களுடன் காணப்பட்ட இந்த சுவரொட்டியில், “ஜூலை போராட்டம் என்னாச்சு... இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை மட்டுமே கேட்கிறோம்.

பள்ளியில் பயின்ற எங்களை ஜூலை போராட்டம் என்ற பெயரில் வெளியே கொண்டுவந்தது பொன்னார் (பொன். ராதாகிருஷ்ணன்) தானே? ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்றீர்களே... இப்போது என்ன ஆச்சு? ஏன் ஓடி ஒளிகிறீர்கள்... இவண், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம், தென்தாமரைக்குளம் பேரூராட்சிகள் இந்து இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்” என எழுதப்பட்டிருந்தது.

இந்த சுவரொட்டிகள் குறித்து உளவுத்துறையினர் விசாரித்தனர். கன்னியாகுமரி தொகுதியை மையமாக வைத்து அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்பதற்கு ஆயத்தமாகி வரும் காங்கிரஸை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் இந்த சுவரொட்டி விவகாரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர் ஒருவர் கூறும்போது, “எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும் தேர்தல் வாக்குறுதியை வெற்றிபெற்ற பின்பு நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான இந்து பெற்றோர்கள், மாணவ, மாணவியரை கல்வி உதவித்தொகை என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபடவைத்து, தேர்தலின்போது உணர்வுகளை தூண்டிவிட்டு வெற்றிபெற்ற பின்பு எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x