Published : 12 Jun 2015 02:08 PM
Last Updated : 12 Jun 2015 02:08 PM

கணவரை கண்டுபிடித்து தரக் கோரி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா

தங்கப்பட்டறை பணிக்குச் சென்ற தன் கணவரைக் காணவில்லை என்று கூறி மகன், மகளுடன் இளம்பெண் ஒருவர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கோவை சீரநாயக்கன் பாளையம், இளங்கோ அடிகள் 2 வீதியைச் சேர்ந்தவர் ஆர்.ஸ்மிதா. வியாழக்கிழமை தர்ணாவில் ஈடுபட்டிருந்த இவர், தனது மனுவில் கூறியிருப்பதாவது:

என் கணவர் ரதீஷ், மகன், மகளுடன் 12 ஆண்டுகளாக சீரநாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறேன். 3 வருடங்களாக கோவை கெம்பட்டி காலனி நகைப்பட்டறையில் பொற்கொல்லராக ரதீஷ் பணிபுரிந்து வருகிறார். குழந்தைகளுடன் கேரளத்தில் உள்ள அம்மா வீட்டுக்குச் சென்றிருந்தேன். கடந்த 23-ம் தேதி வேலைக்கு சென்ற கணவர், இரவு அங்கேயே தங்கி வேலை பார்த்துள்ளார்.

பட்டறை உரிமையாளர் 24-ம் தேதி மாலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரதீஷை மதியத்திலிருந்து காணவில்லை. சுமார் 80 கிராம் மதிப்பு நகையையும் எடுத்துச் சென்றுவிட்டார். அதற்கான பணத்துடன் வரும்படி தெரிவித்தார்.

ஆனால், தொலைபேசியில் அம்மாவுடன் அன்று மதியம் பேசியபோது, பட்டறைக்குச் செல்வதாகக் கூறியிருக்கிறார். மாலை 5.15 மணியிலிருந்து அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது.

என் கணவரைக் காணாததால், 26-ம் தேதி பி2 காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். அங்கே பட்டறை உரிமையாளரை அழைத்து விசாரித்தனர். அவர் பணியாற்றிய பட்டறை பி1 எல்லைக்குள் வருவதால், அங்கு புகார் அளிக்கச் சொல்லி அனுப்பினர் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்மிதா கூறும்போது, ‘பி1 காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, வழக்கு பதிவு செய்யவில்லை. கணவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதற்கு தீர்வு கிடைக்காமல் செல்ல மாட்டேன்’ என்றார்.

இதனால், ஆட்சியர் அலுவலகம் முன்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நீடித்தது. உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீஸார் தெரிவித்து, ஸ்மிதாவையும், அவரது குழந்தைகளையும் அழைத்துச் சென்றனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட ஸ்மிதா.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x