Last Updated : 02 Mar, 2014 06:23 PM

 

Published : 02 Mar 2014 06:23 PM
Last Updated : 02 Mar 2014 06:23 PM

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே?- அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி சென்னை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க அதிமுக பேசி வருவதாக செய்திகள் வரும் நிலையில், தங்களுக்கு தலா 4 தொகுதிகள் வேண்டும் என்பதில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் முற்றுப்பெறாத நிலையிலேயே, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்குமான அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

அவரது இந்த அணுகுமுறையை “தோழர்கள்” வெளிப்படையாக விமர்சிக்காவிட்டாலும் அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் அதிமுக குழு அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடத்திய பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்டுகளுக்கு தலா ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க அதிமுக சம்மதித்ததாகவும் அதை ஏற்க மறுத்த அவர்கள் தங்களுக்கு தலா 4 தொகுதிகள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத பிற கட்சிகளைக் கொண்டு மக்கள் நலனை சிந்திக்கும் ஒரு மாற்று அணியை மத்தியில் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் அதிமுக-வுடன் அணி சேர்ந்துள்ளோம்.

எங்களின் கொள்கை சார்ந்த இந்த முடிவை பலவீனமாக யாரும் கருதிவிடக் கூடாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அணியில் பாமக, மதிமுக கட்சிகளும் இருந்தபோதும்கூட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இப்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே அதிமுக கூட்டணியில் உள்ளதால் கடந்த முறையை விடவும் இம்முறை கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதுதான் எங்களது நியாயமான கோரிக்கை. ஆனால், இதற்கு மாறாக 1 தொகுதி, 2 தொகுதி என அதிமுக கூறுமேயானால் அதனை ஏற்க இயலாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனித்துப் போட்டி?

கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது கேட்ட எண்ணிக்கையில் இடங்களை ஒதுக்க அதிமுக முன்வராததால், அந்த அணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

இந்த நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒதுக்கியதுபோல தலா 3 தொகுதிகளையாவது அதிமுக ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று முடிவை எடுப்பது என்ற மனநிலையில் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா நாளை தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் நாகப்பட்டினம் தொகுதியில் வரும் வியாழக்கிழமை அவர் பிரச்சாரம் செய்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அதிமுக கூட்டணியில் நீடிப்பார்களா இல்லையா என்பது வியாழக்கிழமைக்குள் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x