Published : 19 Jun 2015 07:44 AM
Last Updated : 19 Jun 2015 07:44 AM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை: பாலாற்றில் கழிவுநீரை வெளியேற்ற தடை - மீறினால் சட்டப்படி நடவடிக்கை

‘பாலாற்றில் கழிவுநீரை வெளியேற்றக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாவட்ட ஆட்சியர் சண்முகம் எச்சரித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளின் குடிநீர்த் தேவைக்காகவும் பாலாற்றில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லாததால், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக பாலாற்றில் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, தண்ணீர் உறிஞ்சி எடுத்து மக்களுக்கு விநியோ கித்து வருகிறது. ஆனாலும், மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில், பாலாற்று கரையோரங்களிலும் உள்ள தனியார் தொழிற்சாலைகள் பாலாற்றில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றன. வாலாஜாபாத் பேரூராட்சிப் பகுதிகள் மற்றும் படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றின் கழிவுநீரும் பாலாற் றில் கலக்கிறது. இவற்றின் காரணமாக பாலாற்றில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து மாசடைந்த தண்ணீர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, பாலாற்றில் எவரும் கழிவுநீரை வெளியேற்றக் கூடாது. இதை மீறினால் சம்பந்தப் பட்டவர்கள் மீது பொது சுகாதார விதிகளின்படி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

வாலாஜாபாத் பேரூராட்சிப் பகுதியின் கழிவுநீர் பாலாற்றில் கலப்பது தொடர்பாக ஆட்சியரிடம் கேட்டபோது, ‘‘தொழிற்சாலைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி நிர்வாகம் இந்தத் தவறை செய்யக் கூடாது. கழிவுநீர் செல்லும் கால்வாயின் மதகுகள் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளதால், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதாக பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனவே, சிறிய மதகுகள் மற்றும் கால்வாய்களை சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கழிவுநீர் பாலாற்றில் கலப் பது தொடர்பாக இதுவரை எனது கவனத்துக்கு வரவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x