Published : 17 Jun 2015 07:43 AM
Last Updated : 17 Jun 2015 07:43 AM

கீதாபவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம்: 5 மாவட்டங்களில் சுயம்வரம்

கீதாபவன் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வசதியற்றவர்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதற்கான சுயம்வரம் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் நடக்கிறது.

இது தொடர்பாக கீதாபவன் அறக்கட்டளை நிறுவனர்  அசோக்குமார் கோயல் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

கீதாபவன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வசதியற் றோருக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 248 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி சென்னையில் இலவச திருமணம் நடக்கிறது. இதற்கான மணமக்களை தேர்வு செய்வதற்கான சுயம்வரம் ஜூலை 19-ம் தேதி விழுப்புரத்திலும், ஜூலை 26-ம் தேதி திருவாரூரிலும், ஆகஸ்ட் 9-ம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 16-ம் தேதி ஈரோட்டிலும் ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையிலும் நடக்கிறது. திருமண தம்பதிகளுக்கு 2 கிராமில் தாலி, பட்டுவேட்டி, பட்டுசேலை, 52 வகையான சீர்வரிசைகள், 2 மாதத்துக்கான மளிகைப் பொருட்கள் வழங்கப்படும்.

சுயம்வரத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் www.geetabhavantrust.com மற்றும் www.htctmatri.com ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு 044-22251584 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அறக்கட்டளை அறங்காவலர் கே.கே.குப்தா, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி.சிதம்பரநாதன், செயலாளர் பா.சிம்மசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x