Published : 12 Jun 2015 08:28 AM
Last Updated : 12 Jun 2015 08:28 AM
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடக்கிறது.
தமிழகத்தின் பழமையான வைணவ தலங்களில் திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. இந்த கோயிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. திருப்பணி வேலைகள் முடிந்துள்ள நிலையில், பார்த்தசாரதி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடக்கிறது. ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி, ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ வேதவல்லித்தாயார், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ கோதாண்டராமர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மனவாளமாமுனிகள், ஆழ்வார் ஆச்சாரியர்கள் விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு இன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடு
பார்த்தசாரதி கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார் கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த இரும்புத்தடுப்புகள், சிறப்பு கேமராக்கள், நூற்றுக்கணக்கான அளவில் காவலர்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள், சிறப்பு பேருந்துகள், அன்னதானம், வாகனங்கள் நிறுத்த சிறப்பு ஏற்பாடு, தீயணைப்பு வசதிகள், சிறப்பு காவல் நிலையம் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
200 சிறப்பு பேருந்துகள்
திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி சுவாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நாளை மாலை வரையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பார்த்தசாரதி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நேற்று (11-ம் தேதி) 12-ம் தேதி (இன்று) ஆகிய இரண்டு நாட்கள் 200 சிறப்பு பேருந்துகள் சென்னையின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இயக்கப்படுகிறது.
தகவல் மையம் திறப்பு
பொது மக்களின் வசதிக்காக விவேகானந்தர் இல்லப்பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள பேருந்துகளின் சீரான இயக்கத்தினை கண்காணிப்பதற்கு ஒரு பொது மேலாளர் தலைமையில் 125 பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT