Published : 21 Jun 2015 09:24 AM
Last Updated : 21 Jun 2015 09:24 AM

வருவாய்த் துறை ஊழியர்கள் 24, 25-ல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்: மாநில பொதுச்செயலாளர் தகவல்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வரும் 24, 25 தேதிகளில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என வருவாய்த் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் த.சிவஜோதி தெரிவித்தார்.

வருவாய்த் துறையில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்புவது, வருவாய் உதவியாளர், இளநிலை உதவியாளர் பணி நிலையில் பெயர் மாற்றம், வட்டாட்சியர் உட்பட பல்வேறு நிலைகளில் ஊதிய மாற்றம், ஓட்டுநர் உட்பட பல்வேறு பணி யிடங்களை நிரந்தர ஊழியர்கள் மூலம் நிரப்புவது உட்பட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கட்டமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசால் ஏற்கெனவே ஏற்கப்பட்ட கோரிக்கைகள் மீது அரசாணை வெளியாகும் என எதிர்பார்த்த நிலையிலும் ஏமாற் றமே மிஞ்சியது. இதனால் வரும் 24, 25 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய மத்திய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசுடன் வருவாய்த் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் த.சிவஜோதி கூறியதாவது:

அரசு அழைப்பின்பேரில் தலைவர் ராம்குமார் உட்பட 9 பேர் குழு சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வருவாய்த் துறை அமைச்சருடனும், கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதி வருவாய்த் துறை செயலருடனும் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை கள் மீது நேற்று வரை அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் பின்னர் அமைச்சர், அதிகாரிகள் பேச்சை நம்பி இரண்டு முறை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒரு கோரிக்கைகூட நிறைவேற்றப்படாத நிலையில், அமைச்சர் வாக்குறுதியை மட்டுமே நம்பி போராட்டத்தை வாபஸ் பெற முடியாது.

எனவே திட்டமிட்டபடி வரும் 24, 25 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும். வட்டாட்சியர் முதல் அலுவலக உதவியாளர் வரை மாநிலம் முழுவதும் 12,000 பேர் பங்கேற்பர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x