Published : 27 Jun 2015 08:11 AM
Last Updated : 27 Jun 2015 08:11 AM

ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு தொடங்கியது: 1,700 போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 230 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதுமின்றி வாக்குப்பதிவு முடிவடைந்தது.

மொத்தம் 74.47% வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணி நிலவரப்படி 71% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலவரம் மதியம் 2 மணி நிலவரப்படி 53.1% ஆகவும் பகல் 12 மணிக்கு 35.5% வாக்குகள் பதிவாகியிருந்தன.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காலை 10 மணிக்கு 13% வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அத்தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், சுயேச்சையாக சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது.

தொகுதியில் 230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் முதன்மை அலுவலர், வாக்குப்பதிவு அலுவ லர்கள் என 1,205 பேர் மற்றும் 276 நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அலுவலர்களுக்கான வாக்குச்சாவடிகள் கணினி உதவியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

265 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 530 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருட்கள் நேற்று மாலை 3 மணி முதல் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இன்று காலை 7 மணி அளவில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நுண்பார்வையாளர், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் திறக்கப்பட்டு இயக்கிப் பார்க்கப்பட்டது.

இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முகவர்களை கொண்டு ‘டம்மி வாக்குப் பதிவு’ நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சரியாக 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பதிவாகும் வாக்கு விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் ஆணையத்துக்கு வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் எஸ்எம்எஸ் அனுப்புவார்கள்.

பாதுகாப்பு:

பாதுகாப்புப் பணியில் 987 போலீஸார், 720 துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 22 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர். தொகுதி முழுவதும் போலீஸார் நேற்று மாலை முதல் தொடர்ந்து ரோந்து சுற்றிவருகின்றனர்.

மொத்தம் 2,43,301 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ராணி மேரி கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை வரும் 30-ம் தேதி நடக்கவுள்ளது.

அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுகின்றனர்: இந்திய கம்யூ.குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் அளித்தார்.

''பக்கத்து தொகுதிகளில் உள்ள அதிமுகவினர் 50- 60 பேராக வந்து வாக்களித்தனர். தொகுதிக்கு தொடர்பு இல்லாதவரை துணை ராணுவத்தினரை கொண்டு விரட்ட வேண்டும். கள்ள ஓட்டு போட்டுதான் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஜெயலலிதா உள்ளாரா?'' என்று சி.மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கள்ள ஓட்டு போடும் அதிமுகவினரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முகவர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x