Published : 12 Jun 2015 08:41 PM
Last Updated : 12 Jun 2015 08:41 PM

தஞ்சாவூர், பெரம்பலூரில் 8 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு: பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை

தஞ்சாவூரில் தொழிலாளர் துறையினர் நேற்று முன்தினம் மேற்கொண்ட ஆய்வில் 5 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் ஏ.வெங்கடேசன் தலைமையில் துணை ஆய்வாளர் சு.மதிவாணன், அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலர்கள், சைல்டுலைன் குழுவினர் இணைந்து தஞ்சாவூர் ரயிலடி, பூக்காரத் தெரு, எம்.கே.எம். சாலை, ஆடக்காரத் தெரு, தொல்காப்பியர் சதுக்கம், கொடிமரத்து மூலை, கரந்தை பகுதிகளில் உள்ள கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 5 குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களில் 14 வயதுக்கு மேற்பட்ட 4 பேர் அரசுக் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

14 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைத் தொழிலாளி, பள்ளியில் சேர்ப்பதற்காக அனைவருக்கும் கல்வித் திட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில்…

உலகம் முழுவதும் ஜூன் 12 (இன்று) குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக குழந்தைத் தொழிலாளர்கள் எவரேனும் உள்ளனரா என பல துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆலத்தூர் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உணவு விடுதி, மளிகைக் கடையில் குழந்தைத் தொழிலாளர்களாக பணியாற்றிய இரூர் தங்கராசு மகன் தனபால், மகள் செல்வராணி, திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரைச் சேர்ந்த ரேவதி ஆகியோரை அதிகாரிகள் மீட்டனர்.

விசாரணையில், 3 பேரும் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பணியாற்றியது தெரியவந்தது. 3 பேரும் ஆட்சியர் (பொறுப்பு) ப.மதுசூதன்ரெட்டி முன் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் பள்ளிப் படிப்பை தொடர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

உலகம் முழுவதும் ஜூன் 12 (இன்று) குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x